சென்னை - ரஷ்யா கலாசார மையத்தில் நடைபெற உள்ள, ரஷ்ய கல்விக் கண்காட்சியில், ரஷ்ய நாட்டின் முன்னணி மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைகள் பங்கேற்கின்றன.சென்னை - ரஷ்யா கலாசார மையம் மற்றும் 'ஸ்டடி அப்ராடு' நிறுவனங்கள் இணைந்து, வரும் 6, 7ம் தேதிகளில், ரஷ்ய கல்விக் கண்காட்சியை நடத்துகின்றன.
சென்னை ரஷ்யா கலாசார மையத்தில், காலை 10:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை நடக்கும். இதில், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த, 650 பொறியியல் மற்றும் 63 மருத்துவப் பல்கலைகள் பங்கேற்கின்றன.இதுகுறித்து, தென்னிந்திய ரஷ்யா கலாசார பிரிவு துாதர் மிக்கேல் கோர்படோவ் கூறியதாவது:
இந்தியா, ரஷ்யா நாடுகள், வானியல், ஆராய்ச்சி, பொறியியல், தொழில்நுட்பம், உயிரி வேதியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயலாற்றி வருகின்றன. தற்போது நடைபெற உள்ள கல்விக் கண்காட்சியில், 40 மாணவர்களுக்கு, இலவச கல்வி, தங்கும்இடம் மற்றும் வேலைவாய்ப்புகளை, ரஷ்ய அரசு வழங்க உள்ளது.
கூடங்குளம் அணுஉலைகளைத் தொடர்ந்து, மேலும், எட்டு அணுஉலைகளை அமைக்க, இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த, நன்கு பயிற்சி பெற்ற வல்லுனர்கள் அவசியம். தற்போது, ரஷ்யா வந்து கல்வி பயிலும் மாணவர்கள், இந்த திட்டங்களை செயல்படுத்த தகுதியானவர்களாக விளங்குவர்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், தென்னிந்தியாவிற்கான ரஷ்ய துணைத் துாதர் டிமிட்ரி வி.லோமாகின் மற்றும் 'ஸ்டடி அப்ராடு' நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment