
இப்படியும் இளைஞர்களா!
எங்கள் பக்கத்து ஊரில், இளைஞர் நற்பணி மன்றம் ஒன்று உள்ளது. அவர்கள், ஆண்டுதோறும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டில், விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்துவர். வழக்கம் போல், இந்த ஆண்டும், பகலில் விளையாட்டுப் போட்டிகளும், இரவில், பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடந்தன.
பரிசளிப்பு விழாவில், ஒரு முக்கிய சிறப்பு விருந்தினர் வரப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், மேடையில் தோன்றிய அந்த சிறப்பு விருந்தினரை பார்த்து, அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். காரணம், அவர் ஒரு திருநங்கை.
தமிழகத்திலேயே, முதன் முறையாக, அரசுப் பணி பெற்ற, திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் குணவதி தான் அவர். இவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில், பணிபுரிகிறார். படிப்போ மிக அதிகம்; மாஸ்டர் டிகிரி மற்றும் கின்னஸ் சாதனை என, பல பெருமைக்கும் சொந்தக்காரர். இவரது பேச்சு, மக்கள் மத்தியில், திருநங்கைகள் மீதான தவறான எண்ணத்தை நீக்கியது. விழாவில் பரிசு வழங்கி சிறப்பித்த அவருக்கு, நற்பணி மன்றம் சார்பில், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. பின் நடந்த கலை நிகழ்ச்சிகளும், ஒரு விசில் சத்தம் கூட இல்லாமல், அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்தது.
இவ்விழாவை கண்ட நான் உட்பட அனைவரும்,இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இளைஞர்களை வாழ்த்தினோம்..
திருநங்கைகளை கேலி செய்யும் இளைஞர்ளே... நீங்களும், இந்த நற்பணி மன்ற இளைஞர்களை போல், யோசிக்கலாமே!
No comments:
Post a Comment