Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 16, 2014

    தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

    தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:


    "வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொள்வதற்கோ அல்லது உரையாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேட்டி அணிந்து பங்கேற்க தனியார் மன்றம் தடை விதித்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக மரபுகளுக்கும், தனி நபர் உரிமைக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் எதிரான செயல்.

    11.7.2014 அன்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தில், ஒரு பொது நிகழ்ச்சி, அதாவது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி அவர்கள் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை நீதியரசர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரந்தாமன் மற்றும் அவரோடு சில மூத்த வழக்கறிஞர்களும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்திற்குள் செல்ல முயன்ற போது, வேட்டி அணிந்து இருந்தனர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தச் செயல் தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அவமதிக்கும் செயல் ஆகும்; கொச்சைப்படுத்தும் செயல் ஆகும். இதற்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட்டு 67 ஆண்டுகள் ஆகியும் இது போன்ற செயல்கள் நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது.

    இந்தப் பிரச்சனை 14.7.2014 அன்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்துக் கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்தச் செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மன்ற விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்கள். இந்த அவைக்கு வெளியேயும் சிலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

    தி.மு.க. சார்பில் இந்த அவையில் பேசிய மு.க. ஸ்டாலின்,"இது குறித்து அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து, தமிழ் பாரம்பரியத்திற்குரிய அந்தப் பெருமையை நிலைநாட்டிட வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

    இந்தத் தருணத்தில் 2010ஆம் ஆண்டு இந்த அவையில் நடைபெற்ற ஒரு விவாதத்தை இங்கே எடுத்துக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன். 2010-2011-ஆம் ஆண்டிற்கான சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்,"நம்முடைய சென்னை தலைநகரிலே உள்ள கிரிக்கெட் கிளப், போட் கிளப் போன்ற இடங்களுக்கு நாம் வேட்டி கட்டிச் சென்றால் அனுமதிப்பது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு தடைவிதித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாம் வேட்டி கட்டாமல் செல்ல முடியுமா? பீகாரில் இப்படித்தான் ஓர் ஓட்டலில் பீகார் உடை அணிந்து சென்றவர்களை தடுத்த காரணத்தினால், அந்த ஓட்டலையே மூடிவிட்டார்கள். எனவே, இதற்கு துணை முதல்வர் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று பேசி இருக்கிறார்.

    அதற்கு அப்போதைய துணை முதல்வர், அதாவது உறுப்பினர் மு.க. ஸ்டாலின் அவர்கள், "வேட்டி கட்டுவதில் இருக்கின்ற பிரச்சனைப் பற்றி இங்கே பேசி இருக்கிறார். முதலில் அவர் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வேட்டிக் கட்டிக் கொண்டு வர வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை நான் வைக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.

    இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், இந்தப் பிரச்சனை சுட்டிக் காட்டப்பட்டும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.

    இன்னொரு சம்பவத்தையும் நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முன்னாள் கௌரவஆலோசகர், 2007-ஆம் ஆண்டு சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக சென்ற போது, வேட்டி அணிந்து இருந்தார் என்ற காரணத்தைக் காட்டி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இது குறித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியதோடு, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் அவர் நடத்தி இருக்கிறார்.

    இந்தச் செய்தி பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்தது. ஆனால், இதன் மீதும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தருணத்தில் சர். பி. தியாகராயர் வாழ்க்கையிலே நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களிடையே நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    சென்னை மாநகராட்சியின் தலைவராக சர். பி. தியாகராயர் இருந்த சமயத்தில் வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்தார். அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்தவர் லார்டு வில்லிங்டன். லார்டு வில்லிங்டன், சர் தியாகராயரைப் பார்த்து,"சென்னை மாநகரின் முதல் பிரஜை என்கிற முறையில் நீங்கள் தான் இளவரசரை வரவேற்க வேண்டும்"என்றார். அதற்கு சர் தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் சென்னை மாகாண கவர்னர் லார்டு வில்லிங்டன் சர் தியாகராயரை சந்தித்த போது, "இளவரசரைச் சந்திக்கின்ற போது நீங்கள் இன்னின்ன மாதிரி உடை தான் உடுத்திக் கொண்டு வர வேண்டும்" என்று நிபந்தனை போட்டார்.

    அப்போது, சர். தியாகராயர் என்ன செய்தார் தெரியுமா?

    அரசாங்கத்துக்கு ஒரு பதில் எழுதினார். அந்தப் பதிலில்,"என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை ஆடைகளோடு இளவரசர் என்னைப் பார்க்க விரும்பினால் நான் அவரை மனதார வரவேற்கிறேன். இந்த ஆடையுடன் நான் அவரைப் பார்க்க முடியாதென்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கிற பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார் சர். தியாகராயர்.

    பின்னர் என்ன நடந்தது தெரியுமா? ஆங்கிலேய அரசே பணிந்து வந்தது. சர். தியாகராயர் தன்னுடைய வழக்கமான உடையிலேயே வேல்ஸ் இளவரசரை வரவேற்க அனுமதி வழங்கியது.

    தன்னுடைய உறுதியான நடவடிக்கையால் ஆங்கிலேய அரசையே பணிய வைத்த பெருமைக்குரியவர் சர்.தியாகராயர். ஆங்கிலேய அரசையே பணிய வைத்த நமக்கு மன்றங்கள் எம்மாத்திரம்?

    இந்தப் பிரச்சனை குறித்த உறுப்பினர்களின் கருத்துகளுக்கு பதில் அளித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்யப்படும் என்று கூறினார்.

    இந்தப் பிரச்சனை குறித்து நான் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றம் என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்படும் போது, அதற்கான துணை விதிகளை வகுத்து தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றம் சமர்ப்பித்துள்ளது.

    அந்தத் துணை விதியில், உடை அணியும் முறைகள் குறித்து கீழ்க்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    "10. DRESS REGULATION: Persons will not be admitted into the Club premises if they are not decently dressed. Persons attired in coloured Bermudas, colour / multi colour lungies, cut banians / vests and / or wearing hawai chappals will not be permitted into THE TNCA CLUB"

    அதாவது, கண்ணியமான ஆடையை அணியாதவர்கள் கிளப்பிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வண்ண அரைக்கால் சட்டைகள், வண்ண மற்றும் பல வண்ண லுங்கிகள், கையில்லாத பனியன்கள், அரையங்கிகள் மற்றும் ஹவாய் காலணிகள் ஆகியவற்றை அணிந்து கொண்டு வருபவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த துணை விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் வேட்டியை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே, வேட்டி அணிந்தவர்களை சங்க கட்டட வளாகத்திற்குள் அனுமதிக்காத தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தின் செயல்பாடு, தமிழர் நாகரிகத்தையும், தமிழர் பண் பாட்டினையும் இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்ற விதிகளுக்கும் முரணானதாகும். இது ஒரு 'sartorial despotism', அதாவது உடை தொடர்பான எதேச்சதிகாரம் ஆகும்.

    இது குறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்திற்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்புமாறு தமிழ்நாடு அரசின் சங்கங்கள் பதிவாளருக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன்.

    தமிழர் உடையான வேட்டி அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் இது போன்ற நடைமுறை சென்னையில் உள்ள சில கிளப்புகளில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

    இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், உரிய சட்ட முன் வடிவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதையும், அதன் அடிப்படையில் தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் இனி வருங்காலங்களில் மன்றங்கள் ஈடுபடுமேயானால், அந்த மன்றங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்". இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

    No comments: