நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, பெட்ரோல் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எழுப்பிய கடும் அமளிக்கு இடையே மக்களவையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பிற்பகலில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிதம்பரம் அளித்த விளக்கம்:
"புதிய ஓய்வூதியத் திட்டம் நீண்ட கால பலன்களை அளிக்கும். சம்பாதிக்கும்போதே சேமிக்கும் வாய்ப்பை இந்த மசோதா வழிவகை செய்யும். குறிப்பாக, நிலையாக வருவாய் பெற்றவர்களுக்கு, அவர்கள் ஓய்வுபெறும் காலத்தில் அதிக பலன்கள் கிடைக்கும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 52.83 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பர். மத்திய, மாநில அரசுகள், ஓய்வூதிய சந்தாதாரர்களின் பங்களிப்பாக புதிய ஓய்வூதியத் திட்ட நிதி சுமார் ரூபாய் 34 ஆயிரத்து 965 கோடிக்கும் மேலாக உள்ளது. இந்த தொகையை பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் பயன்படுத்தவும் ஓய்வூதியதாரர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவும் ஆணையம் உருவாக்க புதிய மசோதா வகை செய்கிறது.
ஓய்வூதிய திட்டங்களில் அன்னிய முதலீடுகள் குவியவும் வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, எந்தெந்த திட்டத்தில் தமது ஓய்வூதியத்தை முதலீடு செய்யலாம் என்பதை பயனாளியே தீர்மானிக்கலாம். இது தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைத் தவிர மீதமுள்ளவை அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன' என்றார் சிதம்பரம்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த பெரும்பாலான திருத்தங்கள் வாக்கெடுப்பில் தோல்விடைந்தன. இறுதியாக மசோதாவை ஆதரித்து 174 வாக்குகளும், எதிர்த்து 33 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இந்த மசோதாவை இடதுசாரி கட்சிகள், சமாஜவாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்கவில்லை. இதன் மீதான விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசியது:
சைலேந்திர குமார் (சமாஜ்வாதி கட்சி):
ஆணையம் அமைக்கும் முடிவை எதிர்க்கிறோம். முதலீடு செய்யும் பயனாளிக்கு லாபம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த சரியான திட்டம் இல்லை.
சௌகதா ராய் (திரிணமூல் காங்கிரஸ்): லட்சக்கணக்கானோருக்கு புதிய ஓய்வூதிய சட்ட மசோதாவால் பாதிப்பு நேரும். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துக் கிடைத்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும் அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.
எஸ். செம்மலை (அதிமுக): எந்தவொரு மசோதாவும் அது பெருவாரியான மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், புதிய ஓய்வூதிய மசோதா நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசை அதிலிருந்து மீட்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஈட்டிய பணத்தை சேமித்து வைக்க அறிவுறுத்தும் மசோதா அந்தப் பணத்தை முதலீடு செய்த பிறகு லாபம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஓய்வூதிய திட்டத்தை, பணம் ஈட்டும் வளம் போலக் கருதாமல் சமூக பாதுகாப்புத் திட்டமாகக் கருத வேண்டும்.
டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக): புதிய ஓய்வூதிய மசோதாவை எதிர்த்து ஏற்கெனவே வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். பாடுபட்டு உழைத்துப் பெற்ற பணத்தை பங்குச் சந்தையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மீது முதலீடு செய்வது சரியான பலனைக் கொடுக்காது.
வாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட் ):
ஓய்வூதிய சீர்திருத்தத்தை அரசு இப்போது மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை இந்த மசோதா பறிக்கும். இதன் மூலம் தொழிலாளர்களிடையே பிரிவினை உண்டாகும்.
சஞ்சய் நிருபம் (காங்கிரஸ்): ஓய்வூதியதாரர்களுக்கு நீண்ட காலத் தீர்வை இந்த மசோதா அளிக்கும் என்பதால் இதை ஆதரிக்கிறோம்.
1 comment:
ஓய்வூதியதாரர்கள் அவர்கள் கடைசி காலத்தை கூட......நிம்மதியாக கழிக்க விடகூடாது என்பதற்காகவே இதை கொண்டுவந்திருக்கிறது அரசு.......
Post a Comment