Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, September 21, 2013

    சாக்கடை கழிவுநீர் தேக்கம், சுத்தமில்லாத கழிப்பறை: கேள்விக்குறியாகும் அரசுப் பள்ளிகளின் சுகாதாரம்

    அரசு பள்ளிகளையொட்டி கழிவு நீர் தேக்கம், துப்புரவு தொழிலாளர் பணியிடம் நிரப்பப்படாததால், கழிப்பறைகள், கொசு உற்பத்தி மையமாக மாறி, மாணவர்களின் சுகாதாரத்திற்கு உலைவைக்கிறது. மர்ம காய்ச்சல் துவங்கும் முன், கல்வித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவே பெற்றோர்களின், எதிர்பார்ப்பாக உள்ளது.

    மாவட்டத்தின் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பினால் நிர்வகிக்கும், மூன்று வகையான பள்ளிகள் இருந்தும், துப்புரவு பணியாளர் பணியிடங்கள், பல பள்ளிகளில் காலியாக உள்ளன. பள்ளியில் சேரும் குப்பையை என்றாவது ஒருநாள்தான் சுத்தம் செய்யும் கொடுமை, இங்குதான் நடக்கிறது. கழிப்பறை சுத்தம் என்பது, பல பள்ளிகளில் நடக்காமல், துர்நாற்றத்தில், மாணவர்கள் பாடம் படிக்க வேண்டி உள்ளது.

    மனிதாபிமானமுள்ள தலைமை ஆசிரியர்கள், தங்களது சொந்த பணத்தை செலவு செய்து பள்ளி கழிப்பறையை வெளியாட்கள் மூலம், வாரம் முறை சுத்தம் செய்கின்றனர். கழிவு தண்ணீர் வெளியேறும் அமைப்பு, பல பள்ளிகளில் இல்லாததால், பள்ளி வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தேங்குகிறது.

    இந்த இடங்களில், கருவேலமரம் வளர்ந்து, புதராக காட்சியளிக்கும் அவலமும் உள்ளது. சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததால், கழிப்பறை, தேங்கி உள்ள கழிவு தண்ணீர், கொசு உற்பத்தி மையமாக மாறி வருகிறது. கொசுக்கள் தானே என, அலட்சியம் காட்டுவதால், மர்ம காய்ச்சல் உட்பட பல நோய்களால் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயமும் இங்கு உள்ளது.

    சில பள்ளிகளை சுற்றி ஆண்டுகணக்கில் கழிவு நீர் தேங்கி உள்ளது. கழிவுநீர் கலக்கும் ஊரணிகளும் உள்ளன. இங்கிருந்து தான் மலேரியா, டெங்கு, பைலேரியா எனும் யானைக்கால் நோய், சிக் -குன் குனியா போன்ற நோய்கள், கொசுக்களால் பரவுகிறது. முட்டையாக ஆறுநாள் இருக்கும் கொசு, ஏழாவது நாளில், புழுவாக மாறி, தண்ணீரில் நெளிகிறது. இந்த புழுக்கள், இறக்கை முளைத்தவுடன் கொசுவாக மாறி, 26 நாட்கள் வாழும். இந்த நாட்களில் தினமும் 200 முதல் 400 முட்டைகளை இடும்.

    புகை மருந்து அடிப்பதன் மூலம், கொசுக்கள் தான் சாகும். தேங்கி உள்ள தண்ணீரில் உள்ள முட்டையின் மூலம், கொசு, வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதனால், கொசுக்களால் பரவும் நோய்களுக்கு, முற்றுப்புள்ளி வைப்பதில் சிக்கல் உள்ளது.

    பள்ளிகளில், சுகாதாரம் குறித்து பாடம் நடத்தினால் மட்டும் போதாது, பள்ளி கழிப்பறை, வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை அதிகாரிகள் உணரவேண்டும். மழைகாலம் துவங்கும் முன் இதற்கான நடவடிக்கை எடுத்தால், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து, மாணவர்களை காக்கலாம். இதுவே அனைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ராஜபாளையம் சித்த மருத்துவர் கே.பி.சுப்பிரமணியன், "அரசு பள்ளிகளில் உள்ள காலி இடங்களில், கழிவு தண்ணீர் தேங்குகிறது. வெயில் காலத்தில் பிரச்னை இல்லை. மழைகாலத்தில், கழிவு தண்ணீருடன், மழைநீரும் சேர்ந்து, வகுப்பறை வாசல் வரை தேங்கும். இதை மிதித்து தான், மாணவர்கள் நடக்கவேண்டும். கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி, பள்ளிகளிலே தங்கிவிடும். இதன் மூலம், நோய்கள் பரவும்.

    முதலில், கழிவுதண்ணீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். காலி இடங்களில் மூலிகை செடிகளை வளர்த்து, மூலிகை பண்ணையை பராமரிக்க, என்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் முன்வரவேண்டும். மூலிகை பண்ணை அமைத்தால், பள்ளி வளாகம் சுகாதாரமாக மாறும். கொசு உற்பத்திக்கும் வாய்ப்பு குறைவு," என்றார்.

    விருதுநகர் ஜெயக்குமார் கூறுகையில், "விருதுநகர் பூளூகனுரனி ரோட்டில் உள்ள திருவள்ளுவர் வித்யாசாலா பள்ளி, கே. காமராசர் வித்யாலயா பள்ளி, பாவாலி ரோடு நகராட்சி நடுநிலை பள்ளி அருகே உள்ள வாறுகாலில், கோழி, மீன், ஓட்டல் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் வாறுகால் அடைபட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதில் உருவாகும் கொசுக்களால், பள்ளி மாணவர்களுக்கு, டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரும் முன் காப்பது சிறந்தது," என்றார்.

    அருப்புக்கோட்டை சிக்கந்தர், "அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில், வசதிகள் செய்யப்பட வேண்டும். ஒருசில பள்ளிகளில், காம்பவுண்ட் சுவர், கழிப்பறைகள் இல்லாமல் உள்ளது. அஜிஸ் நகரில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளி, காம்பவுண்ட் சுவர் அருகில், குளம் போல் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. கொசு கடியினால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதுபோன்று பல பள்ளிகள், சுகாதார கேட்டில் உள்ளது. கழிப்பறைகள் இருந்தாலும், சுத்தம் இல்லாமல் உள்ளது," என்றார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரமேஷ்குமார், "பள்ளியை சுற்றி முட்புதர்கள், குப்பை கொட்டுதல் போன்றவற்றால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, மாணவர்கள் பகலிலே கொசுக்கடிக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு, நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதோடு, குப்பை தொட்டிகளை அகற்ற வேண்டும்," என்றார்.

    சிவகாசி சின்னதம்பி, "சிவகாசி நகராட்சி அம்மன்கோவில்பட்டி உயர்நிலைப்பள்ளி, கிழக்கு வாசல் நுழைவு வாயிலில், கழிப்பறை முறையாக பராமரிக்காததால் வளாகத்திலே, திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பள்ளி முன்பாக ஓடும் வாறுகால், சரியாக அகற்றபடாததால், கொசு தொந்தரவு அதிகம் உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள பழைய ஓட்டு கட்டடங்கள் சேதமடைந்து, இடிந்த நிலையில் உள்ளது.

    பள்ளி வளாகத்திற்குள், மழைநீர் வடிகால் வசதி செய்து, மழை பெய்தவுடன் நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

    தினம் இருவேளை துப்புரவு பணி

    முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும், தண்ணீர் தேங்க கூடாது. பள்ளி அருகே உள்ளே வாறுகால் அடைக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகளை அணுகி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், அறிவுறுத்தப்படும்.

    பள்ளிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள், காலை மாலை வேளையில், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும், பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றார்

    No comments: