மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வி - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், இலவச மாணவர் சேர்க்கையை கட்டாயம் நடத்த வேண்டுமென்று, தமிழக திட்டக்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மத்திய கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்களில், ஆறு முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களை, இலவசமாக சேர்க்க வேண்டும்.அவர்களுக்கான மானியத்தை மத்திய அரசே பள்ளிகளுக்கு வழங்கும்.தமிழகத்தில் எல்.கே.ஜி., - யூ.கே.ஜி.,யில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்டது.
புகார்:இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர்.இப்பிரச்னையை தீர்ப்பது குறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி பிரதிநிதிகளுடன், சென்னை எழிலகத்தில் திட்டக்கமிஷன் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பங்கேற்பு:திட்டக்கமிஷன் உறுப்பினர் செயலர் சுகதோ தத், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக் கமிஷன் உறுப்பினர் செல்வக்குமார், பள்ளிக் கல்வி, மெட்ரிக், தொடக்கக் கல்வி, ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள், திட்டக்கமிஷன் அதிகாரி குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இலவச இடம் தர மறுத்து விடுவதாக அதிகாரிகள் புகார் எழுப்பினர்.அப்போது, 'சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும் கட்டாயம், 25 சதவீத மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும். இதற்கு மறுக்கும் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, சி.பி.எஸ்.இ., டில்லி அலுவலகத்துக்கு அனுப்பி அங்கீகார இணைப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், போலி வருமான சான்றிதழ் கொண்டு வந்து, இலவச ஒதுக்கீடு கேட்டால், அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment