Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Tuesday, June 2, 2015

  வெளிநாட்டுக் கல்வி மாய மான் வேட்டையா?

  நடுத்தரக் குடும்பத்திலேயே, ‘என் பையன் உக்ரைன்ல படிக்கிறான்’, ‘ரஷ்யாவுல படிக்கிறான்’ என்று சொல்லும் அளவுக்கு வெளிநாட்டுக் கல்வி எளிமையாகி விட்டது. ‘50% மதிப்பெண் போதும். உலக ரேங்கிங் கல்லூரியில் குறைந்த செலவில், பகுதிநேர வேலை, இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளோடு படிக்கலாம். முடிந்ததும் லட்சங்களில் மாதச் சம்பளம். குடியுரிமையும் வாங்கலாம்’ என்றெல்லாம் விளம்பரங்கள்் மயக்குகின்றன. ஆண்டுக்கு ஆண்டு வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இந்தக் கல்வியாண்டில் தமிழகத்திலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடு் செல்ல இருக்கிறார்கள்.   உண்மையில் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறதா?  ‘‘ஏஜென்ட்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி, பெரும்தொகையை செலவு செய்து வெளிநாட்டில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்கள் அக்கறையுள்ள சில கல்வி ஆலோசகர்கள். குறிப்பாக எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களின் நிலை ‘அந்தோ’ பரிதாபம்.இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் சில ஐ.ஐ.டிகள் தவிர வேறெந்த நிறுவனமும் உலகத் தரப் பட்டியலில் வருவதில்லை. உலகத்தரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் பலவும், பிற நாடுகளிலிருந்து அங்கு படிக்க வரும் மாணவர்களுக்கென்று சில இடங்களை ஒதுக்குகின்றன. 2000த்துக்குப் பிறகு பல நாடுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு சட்டச்சலுகைகள், விசா விலக்குகள், வேலை தேடும் வாய்ப்புகளை அளித்தன.

  அதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பரவலாக மாணவர்கள் வெளிநாடு செல்லத் தொடங்கினார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு உள்நாட்டில் போணியாகாத இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களும் இங்குள்ள முகவர்களை வளைத்தன. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மாணவர்களைக் குறி வைத்தே புதிது புதிதாக கல்வி நிறுவனங்களும் உருவாகத் தொடங்கின. அவர்கள் தரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, சில ஏஜென்ட்கள் மாணவர்களை ‘பிரெய்ன்வாஷ்’ செய்து அந்தக் கல்வி நிறுவனங்களுக்கு ஆள் பிடித்தார்கள். 

  +2 முடிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு மருத்துவம். ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கடும் போட்டி. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் செலவு அதிகம். மருத்துவக் கனவு பலிக்காமல் வருந்தும் மாணவர்கள் இந்த வெளிநாட்டு முகவர்களின் இலக்காக மாறினார்கள். ரஷ்யா, சீனா, உக்ரைன் உள்பட பல நாடுகளில் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்களை இங்கே கடைவிரித்தார்கள். இங்கிருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளோடு ஒப்பிடும்போது, செலவு குறைவு; குறைந்த மதிப்பெண்களே போதுமானது; தவிர ஏஜென்ட்கள் தந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஈர்த்ததால் நிறைய மாணவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லத் தொடங்கினார்கள். 

  இந்த எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவக் கவுன்சில், ‘வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பதிவுசெய்ய FMGE (Foreign Medical Graduates Examination) என்ற தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராக பிராக்டீஸ் செய்ய முடியும்’ என்ற விதிமுறையை 2002ம் ஆண்டில் கொண்டு வந்தது. இந்த இடத்தில்தான் சிக்கல் தொடங்கியது. 

  பெரும்பாலான மாணவர்களால் இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிகிச்சையளித்த சிலர், போலி மருத்துவர்கள் என்று கைது செய்யப்பட்டுள்ளார்கள். பணத்தையும் தொலைத்துவிட்டு, ஆறாண்டு கால வாழ்க்கையையும் தொலைத்து விட்டு பல ஆயிரம் மாணவர்கள் எதிர்காலம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

  “பொதுவாக வெளிநாட்டில் படிப்பதில் பல நன்மைகள் உண்டுதான். ஆனால் என்ன படிக்கிறோம், எங்கே படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்...” என்கிறார் நீண்ட அனுபவமுள்ள வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் னிவாஸ் சம்பந்தம். ‘‘ஒரு காலத்தில் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள். நேரடியாக கல்வி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து மாணவர்களைச் சேர்ப்பார்கள். 

  படிப்பு முடியும்வரை மாணவர்களுக்கு இந்த ஆலோசகர்களே பொறுப்பு. இன்று ஏராளமானோர் வந்து விட்டார்கள். கல்வித்தரம், வேலைவாய்ப்பு, மாணவர்களின் எதிர்காலம் பற்றி யோசிக்காமல் சகல கல்வி நிறுவனங்களும் இங்கே மார்க்கெட்டிங் செய்கிறார்கள். ஒரு ஆலோசகர் தனக்குக் கீழ் நிறைய முகவர்களை நியமிக்கிறார். முகவர்கள் நடைமுறைக்குப் பொருந்தாத வாக்குறுதிகளைக் கொடுத்து மாணவர்களைப் பிடிக்கிறார்கள். ‘வெளிநாட்டில் மருத்துவம் படிப்பவர்கள் இந்தியாவில் தேர்வு எழுதினால்தான் சிகிச்சை அளிக்க முடியும்’ என்றோ, அந்தத் தேர்வு கடினமானது என்றோ சொல்வதேயில்லை.  

  2012ல் 14,476 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினார்கள். அதில் 3,150 மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றார்கள். 11,326 மருத்துவப் பட்டதாரிகள் எதிர்காலம் தெரியாமல் தவிக்கிறார்கள். நாடு முழுவதும் இப்படி பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தத் தேர்வில் சிறிதளவும் வெளிப்படைத்தன்மை இல்லை. வினாத்தாளைக் கூட தேர்வு முடிந்ததும் வாங்கிக் கொள்வார்கள். ரிசல்ட் மட்டும்தான் வரும். திருத்தப்பட்ட விடைத்தாளைப் பார்க்கமுடியாது. 

  தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் உடனடியாக சிகிச்சை அளிக்கமுடியாது. ஒரு பல்கலைக்கழகம் அல்லது மருத்துவமனையில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் மருத்துவராகி சிகிச்சை அளிக்கமுடியும். முக்கியமாக, அவர்கள் படித்த கல்வி நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்திலும், இந்திய மருத்துவக் கவுன்சிலிலும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். சில முகவர்கள் அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்குக் கூட மாணவர்களை அனுப்பி அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்...’’ என வருந்துகிறார் னிவாஸ் சம்பந்தம். 

  இவ்வளவு சிக்கல் மிகுந்த மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை வளைக்க இந்தக் ‘கல்வி ஆலோசகர்கள்’ பயன்படுத்தும் ‘டெக்னிக்’ அபாரமானது. வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவனின் பெற்றோரையே முகவர்களாக நியமிக்கிறார்கள். ‘ஒரு மாணவனுக்கு இவ்வளவு’ என்று ஆசை காட்டுவதால் எதார்த்தத்தில் இருக்கும் சிக்கல் புரியாமல் அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் தள்ளிவிடுகிறார்கள். 

  வெளிநாட்டில் படிக்கும் மாணவனின் பெற்றோரே சொல்வதால், மற்றவர்கள் நம்பி தங்கள் பிள்ளைகளையும் சேர்க்கிறார்கள். இப்படித்தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பல மாணவர்களுக்கு முதலாமாண்டு முடித்தபிறகுதான் இந்தியாவில் நடக்கும் தேர்வு பற்றியே தெரியவருகிறது என்பது பெரும் சோகம். 

  என்றால் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதே வீண்தானா?‘‘அப்படிச் சொல்லமுடியாது. ரஷ்யா, சீனா, ஜார்ஜியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், செயின்ட் லூசியா, கயானா போன்ற நாடுகளில் மருத்துவம் படிக்க இங்கிருந்து நிறைய மாணவர்கள் செல்கிறார்கள். 5 முதல் 6 ஆண்டுகள் படிப்பை முடிக்க ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆனால் அங்கு பகுதிநேர வேலைக்குச் செல்ல முடியாது. 

  படிப்பை முடித்தபிறகு, இந்த நாடுகளில் மருத்துவராகப் பதிவுசெய்து பணிபுரியவும் முடியாது. இந்தியாவுக்குத்தான் வரவேண்டும். இங்கே, தேர்வில் தேர்ச்சி பெறமுடியும் என்ற நம்பிக்கையும் திறமையும் கொண்ட மாணவர்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் அது எளிதில்லை. அதேநேரம், ஆங்கிலத்தைத் தாய்மொழி யாகக் கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மருத்துவம் படிக்கலாம். 

  படிப்பு முடிந்ததும் அங்கேயே மருத்துவராகப் பதிவு செய்து சிகிச்சையும் அளிக்கலாம். ஆனால் அந்நாட்டு மருத்துவக் கல்வி நிலையங்களில் மிக நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே இடம் கிடைக்கும். நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும். அதைவிட முக்கியம், படிப்பை முடிக்க குறைந்தது ரூ.1 கோடி செலவாகும்...’’ என்கிறார் னிவாஸ் சம்பந்தம். வெறெந்த படிப்புகளை வெளிநாடுகளில் படிக்கலாம்? செலவுகளை எப்படி ஈடுகட்டலாம்? வேறென்ன சிக்கல்கள் உள்ளன..?அடுத்த வாரம் அலசுவோம். 

  வெளிநாட்டில் மருத்துவம் படிப்பவர்கள் இந்தியாவில் ஒரு தேர்வு எழுதினால்தான் டாக்டர் ஆக முடியும்’ என்றோ, அந்தத் தேர்வு கடினமானது என்றோ சொல்வதேயில்லை!
  - வெ.நீலகண்டன் 

  No comments: