கல்வித்துறையில் சட்ட நுணுக்கம் தெரிந்தோர் இல்லாததால் ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால் மற்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு தொடர்பான ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்தில் தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றனர்.அவர்களே நீதிமன்றங்களுக்கு தாக்கல் செய்ய வேண்டிய பதில்களை தயாரிக்கின்றனர்.
சட்ட நுணுக்கம் சரியாக தெரியாததால் பதில்களை முறையாக தயாரிப்பதில்லை. இதனால் பல வழக்குகளில் கல்வித்துறைக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது. சில நேரங்களில் பணிச்சுமையால் பதிலை தாக்கல் செய்வதில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவதோடு, ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும் உதவியாளர்கள் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று விடுவதால் மற்ற பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க செயலாளர் சிவக்குமார் கூறியதாவது: சட்ட நுணுக்கம் தெரியாததால் நீதிமன்றத்திற்கு பதில் தயாரிக்க முடியாமல் தவிக்கிறோம்.
மாவட்டந்தோறும் 300 வழக்குகள் வீதம் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன. சொந்தப் பணத்தில் வழக்கறிஞர் கட்டணம் செலுத்துகிறோம். இப்பிரச்னையை தீர்க்க மாவட்டந்தோறும் கல்வித்துறைக்கென சட்ட அலுவலரை நியமிக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment