அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் நேர்காணலை வீடியோவில் பதிவு செய்வதால், முறைகேடுகளுக்கு இடமில்லை,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிலுள்ள, இந்திய மருத்துவ முறையிலான ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில், உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு, நேற்று நடந்தது.மொத்தம், 83 காலிப் பணியிடங்களுக்கு, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களின், 12 மையங்களில், 3,695 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும், 1,798 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர், தேர்வுப் பணிகளை பார்வையிட்டனர்.பின், பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி:
இந்திய மருத்துவ முறை உதவி மருத்துவ அதிகாரி தேர்வு முடிவுகள், ஒன்றரை மாதத்தில் வெளியாகும். 'குரூப் - 2' பதவியில், 1,241 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடந்த, 29ம் தேதி கடைசி நாள். இதில், ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், 10.64 லட்சம் பேர் எழுதிய, குரூப் - 4 தேர்வின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும் 15ம் தேதி துவங்க உள்ளது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, குரூப் - 1 பதவிக்கான முதன்மைத் தேர்வு, ஜூன் 5, 6 மற்றும், 7ம் தேதிகளில் நடக்கிறது. சென்னையில், 4,389 பேருக்கு தேர்வு நடக்கிறது. துணை ஆட்சியர், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் மாவட்ட பதிவாளர் போன்ற பதவிகளுக்கான, குரூப் - 1 தேர்வு, இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்.போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு நேர்காணல் நடக்கும்போது, நேர்காணல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. எனவே, முறைகேடுகள் என்ற புகார் இன்றி, வெளிப்படையாக இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment