தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது சில நாள்கள் தாமதமாகும் என்று தெரிகிறது. தாமதம் ஏன்?: மறுகூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் பெற விண்ணப்பித்துள்ள பிளஸ் 2 மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்களைத் தொகுக்கும் பணியை தேர்வுத் துறை அதிகாரிகள் இப்போது செய்து வருகின்றனர்.
சில நாள்களில் இந்தப் பணி நிறைவடைந்து, மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய சி.டி.யை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு தேர்வுத் துறை அதிகாரிகள் அளித்த பிறகே எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் தயாராகும்.
எனவே, ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி வரும் 12-ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை வெளியிட வாய்ப்பில்லை.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) வழங்குதல், தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது குறித்த தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.இ.க்கு ஜூன் 15-இல் ரேண்டம் எண்: பி.இ. படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களான கணிதம்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களில் மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்ணைத் தொகுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இத்தகைய மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் சி.டி. அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக் குழுவிடம் சில நாள்களில் அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,54,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஜூன் 15-ஆம் தேதி ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) வழங்கப்படும்; தேர்வுத் துறையிடமிருந்து மறு மதிப்பீட்டு மதிப்பெண் சி.டி. கிடைக்கும் நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 19-ஆம் தேதி பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று,அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment