தமிழகத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, கோடையில் மின் தடை நீடித்த நிலையில், நடப்பாண்டு மின் உற்பத்தி நிறுவுத்திறன் அதிகரித்ததாலும், கோடைமழை கை கொடுத்ததாலும், தடையில்லா மின் வினியோகம் செய்து, வாரியம் சாதனை படைத்துள்ளது.
கடந்த, 2008ல், தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறன், 10,122 மெகாவாட் ஆக இருந்தது. அந்த ஆண்டில், தமிழகத்தின் மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்தது.
வாரம் ஒருநாள் விடுமுறை:
இதனால், 2014 மார்ச், 6ம் தேதி முதல், தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் மின்சக்தி விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், பற்றாக்குறையை சமாளிக்க முடியாததால், 2014, செப்., 1ம் தேதி முதல், தமிழகத்தில் முதன்முறையாக சென்னையை தவிர, பிற பகுதியில், ஐந்து மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அனல், புனல், காற்றாலை மின் உற்பத்தி நிறுவுத்திறன் அதிகரித்தும், வெளிமாநிலங்களில் மின்சாரம் கொள்முதல் செய்து வினியோகம் செய்த போதிலும், தமிழக மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியவில்லை.
குறிப்பாக, கடந்த, 2008 முதல் 2014ம் ஆண்டு வரை, தொடர்ந்து, ஏழு ஆண்டுகள், கோடை காலத்தில் தமிழகத்தில் மின்தேவை அதிகரித்த நிலையில், தேவையை விட குறைவான மின்சாரமே வினியோகம் செய்யப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக, கோடையில் மாநிலம் முழுவதும் பரவலாக மின்தடை இருந்ததால், பொதுமக்கள் பாதித்தனர்.
கடந்த, 2004 ஜூன் 24ம் தேதி, தமிழகத்தின் மின் தேவை அதிகபட்சமாக, 13,775 மெகாவாட் ஆக அதிகரித்ததால், நடப்பாண்டு கோடையில் மின்தேவை மேலும் அதிகரிக்கும். அதற்கேற்ப, மின்தடையும் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டு, தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவுத்திறன் அதிகரித்தது. புது அனல் மின் நிலையங்கள் உற்பத்தி துவங்கியதாலும், மத்திய மின்தொகுப்பில் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு அதிகரித்ததாலும், நடப்பாண்டு தமிழகத்தின் மின் உற்பத்தி திறன், 13,336 மெகாவாட் ஆக அதிகரித்தது.
கோடை மழை:
மேலும், நடப்பாண்டு, மே மாதம், மாநிலம் முழுவதும் பரவலாக கோடைமழை பெய்தது. இதனால், மின் தேவை அதிகபட்சமாக, 12,350 மெகாவாட் ஆக அதிகரித்தது.மே மாத இறுதி நாளான நேற்று, மின் தேவை, 11,100 மெகாவாட் ஆக இருந்தது. நடப்பாண்டு கோடையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த, ஏழு ஆண்டுக்கு பின், மின்வாரியம் கோடையில் வெயில் உச்சத்தை எட்டும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்து, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment