சென்னையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் நடத்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.
பதவியையும் அவர் தானாகவே இழந்து விட்டார். ஜெயலலிதா நேற்று சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று புதிய முதல் அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசரக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. கூட்டம் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவராக ஒருமனதாக ஓ. பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் தாங்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்து கையெழுத்திட்ட கடிதத்தை கவர்னர் கே.ரோசய்யாவிடம் வழங்குகிறார்கள். அதனைத்தொடர்ந்து புதிய முதல்-அமைச்சர் நாளை பதவி ஏற்பார் என்று தெரிகிறது. முன்பு டான்சி நில வழக்கு காரணமாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று கடந்த 2001ம் ஆண்டு முதல்அமைச்சர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்த போது, மந்திரியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் புதிய முதல்அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன்பிறகு டான்சி வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்டதால், ஜெயலலிதா ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2002ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் முதல்அமைச்சராக பதவி ஏற்றார்.
No comments:
Post a Comment