
சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், ரோசைய்யாவை சந்தித்துப் பேசினர். அப்போது, அ.தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான, கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினர். இதன் தொடர்ச்சியாக, ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் ரோசையா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, 2வது முறையாக, ஓ.பன்னீர் செல்வம், தமிழக முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளார்.
அரசியல் பயணம்
அ.தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதலே உறுப்பினராக இருந்து வரும் ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயலாற்றி உள்ளார். பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் ஆரம்பக் காலத்தில் பதவி வகித்துள்ளார். தேனி மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார். டான்சி முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காரணத்தால், தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக நேரிட்டது. இதையடுத்து, ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக 2001ம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்றார். இந்நிலையில், தற்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, 2வது முறையாக, ஓ.பன்னீர் செல்வம், தமிழக முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ளார்.
No comments:
Post a Comment