கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அதிக பணியிடங்கள் காலியாக இருப்பதால், பதிவு செய்ய வரும் நபர்கள் விரட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் வால்பாறையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை வசிக்கும் நபர்கள் கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும். இங்கு புதிய பதிவு, பதிவை புதுப்பித்தல், பதிவு மூப்பு உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அறிய, தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பதில், பணியாளர்கள் சுணக்கம் காட்டுவதாகவும், பதிவு செய்ய வரும் நபர்களை விரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பதிவுதாரர்கள் கூறுகையில், "பதிவு செய்ய வரும் நபர்களை "அங்கே உட்காரதே, இங்கே உட்கார்", "அங்கே போ, இங்கே போ" என ஒருமையில் பேசி விரட்டுகின்றனர். பதிவுக்காக வரும்போது, அலுவலகத்தில் பதிவு செய்யாமல் வெளியே "ஆன்லைனில்" பதிவு செய்து கொள்ளுங்கள் என துரத்துகின்றனர். இங்கு பணியாற்றும் சில ஊழியர்கள் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரவே அஞ்சுகிறோம்" என்றனர்.
மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், "தன்னார்வ பயிலும் வட்டம்" செயல்படுகிறது. இதில் அரசுத் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஊழியர்களின் விரட்டும் மனப்போக்கால், இம்மையத்தை பயன்படுத்திக் கொள்ள பலர் தயக்கம் காட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், "மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் ஆட்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. ஓய்வு பெற்றவர்கள், மாறுதலாகி சென்றவர்களுக்கு பதிலாக புதிய நபர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அலுவலகத்தில் 16 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் கடுமையான பணிச்சுமையுடன் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தினசரி வேலை நேரத்துக்கு பிறகும், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரி லேயே பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், காலதாமதம் என்பதால் பலர் பொறுமை இல்லாமல் வெளியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்கின்றனர். ஊழியர்கள் பதிவுதாரர்களை விரட்டு வதாக புகார் எதுவும் வரவில்லை" என்றனர்.
No comments:
Post a Comment