முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வின் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்த்தல் 17-ந் தேதி நடக்கிறது.
எழுத்து தேர்வு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் தேர்வு எழுதினார்கள்.
தமிழ் பாடத்தேர்வில் 44 பிழைகள் இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையொட்டி நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்பாட தேர்வு முடிவு வெளியிடப்பட்டு தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
முடிவுகள் வெளியீடு
மற்ற பாடங்களுக்கு ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டு முடிவும் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்த்தலும் முடிந்தது. ஆனால் விடைத்தாள்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்று சிலர் நீதிமன்றங்களை நாடினார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி ஆங்கிலம், கணிதம், விலங்கியல், பொருளாதாரம், மைக்ரோ பயாலஜி உள்பட 10 பாடங்களின் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
விழுப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 17-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெற்றவர்கள் நீதிமன்ற உத்தரவு மற்றும் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.
இந்த தகவலை ஆசிரியர் தேர்வுவாரிய தலைவர் விபு நய்யார், செயலாளர் உறுப்பினர் தண்.வசுந்தராதேவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மீதம் உள்ள தாவரவியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலும் மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியிடப்படுவது உறுதி என ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment