முதுகலை ஆசிரியர் தேர்வில், கணிதம், விலங்கியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்ற புதிய தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு ஜவ்வாக இழுத்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் இறுதி தேர்வுப் பட்டியல் (செலக்சன் லிஸ்ட்) வெளியிடப்பட்டு உள்ளது. இதர பாடங்கள் வழக்கு விவகாரத்தில் சிக்கியிருந்தன.
இந்நிலையில், சென்னை, ஐகோர்ட் உத்தரவின்படி, ஆங்கிலம், கணிதம், விலங்கியல், புவியியல், பொருளியல், இல்ல அறிவியல், உடற்கல்வி இயக்குனர் நிலை - 1, மைக்ரோ - பயாலஜி, பயோ - கெமிஸ்ட்ரி, தெலுங்கு ஆகிய, 10 தேர்வுகளுக்கான விடைகளை, டி.ஆர்.பி., மீண்டும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், புதிய தேர்வு பட்டியலை, நேற்று, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது.
இதுகுறித்த டி.ஆர்.பி., அறிவிப்பு: தாவரவியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை தவிர, இதர பாடங்களுக்கு மட்டும், புதிய தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த பாடங்களுக்காக, அக்டோபர், 7ல் வெளியிடப்பட்ட தேர்வு முடிவு ரத்து செய்யப்படுகிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏற்கனவே, மூன்று நாட்கள், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டன.
அதில் பங்கேற்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பாகவும் மற்றும் புதிய தேர்வு முடிவால் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், வரும் 17ம் தேதி, விழுப்புரம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. அதில், சம்பந்தபட்டவர்கள் பங்கேற்க வேண்டும். வெளியிடப்பட்டு இருப்பது, தற்காலிக தேர்வு பட்டியல் தான். இது, வழக்கின் இறுதி முடிவிற்கு உட்பட்டது. இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.
திருத்திய தேர்வு பட்டியலில் 87 பேர் புதிதாக இடம் பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
1 comment:
trb pg tamil medium commerce 2012 result yinnum yen varavillai nanga pavapatta jemmama
Post a Comment