"சிந்திக்க பயப்படுபவர்கள், சிந்திக்க மறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது" என, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் பேசினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக, முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆண்டுதோறும், சாதனையாளர்களுக்கு, விருது வழங்கி கவுரவிப்பர். உலக அளவிலான சாதனையாளர்களுக்கு, "அனைத்துலக அறவாணன் சாதனை விருது" மற்றும், இந்திய அளவிலான சாதனையாளர்களுக்கு, "அனைத்திந்திய அறவாணன் சாதனை விருது" ஆகியவை வழங்கி வருகின்றனர்.
கடந்த, 2012ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, விருது வழங்கும் விழா, சென்னை அமைந்தகரையில் உள்ள, தமிழ் கோட்டத்தில் நடந்தது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் சுவாமிநாதன், வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில பேராசிரியர் ரவீந்திரநாதன் சார்பில் அவர் மனைவி அமுதா ரவீந்திரனுக்கும், விருது வழங்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நாமக்கல் சுப்பிரமணியன் கலை கல்லூரியின் தாளாளர், பழனியாண்டி பாராட்டுரை வழங்கினார். விழாவில், க.ப.அறவாணனின் பல நூல்கள் வெளியிடப்பட்டன.
விழாவில், முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் பேசியதாவது: "சின்ன குழந்தைகள், எப்போதும் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால், வயதானோர், அதை விரும்புவதில்லை. தமிழர்கள் பெரும்பாலானோர், வயோதிகர்களாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இனிமேலாவது, தினமும் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.
சிந்திக்க பயப்படுபவர்கள், சிந்திக்க மறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், மது அருந்தும் பழக்கமும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. தமிழ் சமூகத்துக்கு, இது அழகல்ல. "மக்கள் விரும்புவதால் மது விற்கிறோம்; மக்கள் விரும்புவதால் ஆங்கில கல்வி கொண்டு வருகிறோம்" என, தமிழக அரசு சொல்கிறது.
மக்கள் விரும்புவதை செயல்படுத்துவது நல்ல அரசல்ல; மக்களுக்கு எது நல்லதோ, அதை செயல்படுத்துவதே நல்ல அரசு. "நன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே" என்பது நமது அடிப்படை அறம். ஆனால், நமது அரசுகள், நன்னடத்தையை சொல்லித் தராமல், குற்றவாளிகளை தண்டிப்பதில் மட்டும், ஆர்வம் செலுத்துகிறது.
குற்றம் செய்த பிறகு தண்டிப்பதை காட்டிலும், குற்றம் செய்யாமல் இருக்கும் நன்னடத்தையை, அரசே கற்றுக் கொடுக்க வேண்டும். அரசு அதை செய்யாத போது, அதை செய்யச் சொல்லி, குரல் எழுப்புவது, படித்தவர்களின் கடமை.
மற்றவர்களுடன் பழகும் பழக்க வழக்கத்தை, நமது இலக்கியமே, வழிகாட்டுகின்றன. ஆத்திச்சூடியில், முதல் வாக்கியமே, "அறம் செய்ய விரும்பு" என்பது தான். சிறுவயதில் ஆழமாக பதியும் அந்த வார்த்தையே, வாழ்க்கை முழுவதும் நம்மை வழிநடத்தும். அதற்கு இலக்கியம் துணை புரியும்." இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment