மாணவ, மாணவியர், கல்வியில் சிறந்து விளங்க, கல்வி ஞான உருவச்சிலை' கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும், வினோத உருவச்சிலை, ஈரோட்டில் தயாராகி வருகிறது. தீராத நோய், குடும்ப பிரச்னை, சொத்து, திருமண தடை, குழந்தையின்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க, இந்த உருவ வழிபாடு முறை, நடைமுறையில் உள்ளது.
ஈரோடு மாநகராட்சி இந்திராபுரத்தைச் சேர்ந்த பழனியப்பசெட்டியார், 75, களி மண்ணால் ஆண், பெண், விலங்குகளின் உருவம் செய்யும் தொழில் செய்கிறார். தவழும் பிள்ளை, தொட்டில் பிள்ளை, நடக்கும் பிள்ளை, மடிகால் பிள்ளை, நடையாள் நடை பெண், ஆடு, பசு, மாடு, குதிரை, வேட்டை நாய், பாதம் ஆகிய உருவங்களை களி மண்ணால் செய்கின்றனர்.
பழனியப்பசெட்டியார் மற்றும் அவரது மகன் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: உருவச்சிலை செய்யும் தொழிலை, பாரம்பரியமாக செய்கிறோம். தை பொங்கலுக்கு பொங்கல் பானை, உழவர் திருநாளுக்கு பசுமாடு, மாரியம்மன் திருவிழாக்களில், நேர்த்திக்கடனுக்காக, திரு உருவங்கள் செய்கிறோம். உழவர் தினத்தன்று, பசுமாடுகள் பால் வளம் பெற, மாடுகளுக்கு கோமாரி நோய், பல நோய்கள் வராமல் தடுக்க உருவங்கள் செய்கிறோம். சரியாக படிக்காத, மாணவ, மாணவியர், நன்றாக படிக்க, கல்வி ஞான உருவச்சிலை, 2,500 ரூபாய்க்கு செய்கிறோம். சீருடையுடன் புத்தகப்பை சுமந்திருப்பது போன்று உருவச்சிலைகள் செய்கிறோம். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில், ஆர்டர் கொடுத்து வாங்கி, நேர்த்திக்கடன் செலுத்துவர். காலில் ஏற்படும் நோய்க்கு பாதமும், குழந்தை பாக்கியத்துக்கு தொட்டிலுடன் குழந்தை செய்து தருகிறோம். தவழும்பிள்ளை, 1,000 ரூபாய், தொட்டிலுடன் பிள்ளை, 2,000, நடைபிள்ளை, 500, மடிகால் பிள்ளை, 1,000, நடையாள் நடை பெண், 1,500, ஆண் மற்றும் பெண் உருவம் தலா, 1,000, பசு, மாடு, குதிரை, 500 முதல் 1,500 ரூபாய் வரையும், பாதம், 200, வேட்டைநாய் மற்றும் ஆடு தலா, 500 ரூபாய்க்கு விற்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment