இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திமுக வேடிக்கை பார்க்காது. களம் அமைத்து போராட்டம் நடத்த தயங்காது என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திராவிட இயக்கக் கொள்கைகளையும், சின்னங்களையும் வேரோடும், வேரடி மண்ணோடும் குழி தோண்டி புதைக்க வேண்டு மென்ற எண்ணத்தோடு முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவினால் சமூக நீதிக் கொள்கைக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது.திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி ஓமந்தூரார் வளாகத்தை உருவாக்கினோம் என்ற ஒரே காரணத்திற்காக புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை இரண்டரை ஆண்டுக் காலமாக பூட்டி வைத்த முதல்வர், தற்போது அதே கட்டிடத்தில் புதியமருத்துவமனையை நடத்தப் போவதாக அறிவித்து, தலைமைச் செயலக அலுவலகத்திற்காகவும், சட்டப் பேரவைக்காகவும் எனத் திட்டமிட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை மருத்துவமனைக்கு உரிய விதத்தில் மாற்றுவதற்காக, பல கோடி ரூபாய், மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்து மாற்றியமைத்து, தற்போது அந்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக டாக்டர்களையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக் கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.இந்த அதிகாரிகளையும், டாக்டர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை 27-12-13ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே, திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுகின்ற காரணத்தால், தற்போது அங்கே நியமிக்கப்பட வுள்ள அதிகாரிகளுக்கும், டாக்டர்களுக்கும் சம்பளத்தையும் மிக அதிகஅளவில் அறிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் பதவிக ளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஊதியம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு என்று குறிப்பிட்டுள்ள அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அரசின் இந்த ஆணையைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டதுடன், இதனை அதிமுக அரசு திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதிமுக அரசு சமூக நீதி லட்சியத் திற்கு எதிராகச் செயல்படுவதென்பது இது முதல் முறையல்ல 2013, ஆகஸ்ட் மாதம்17, 18ம் தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.அப்போது நான், தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60 சதவீதம்.
2 முறை ஏற்கனவே நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்த பட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினரும் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தான் வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர் ஆகியோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண் டும் என்பது தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும்.தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆந்திராவில் முன்னேறிய வகுப்பினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோ ருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் அசாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவீதம் என்றும் ஒரிசாவில் உயர்சாதியினருக்கு 60 சதவீதம், மற்றவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதாவின் அதிமுக அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீத மதிப்பெண் என்று கல்வி மற்றும் சமூக நிலைகளில் பிற்படுத்தப்பட்டோரையும், மிகப் பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் முன்னேறிய வகுப்பினரைப் போலவே கருதி, நிர்ணயித்துள்ளது என்பது, பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதுமாகும்.
எனவே ஆசிரியர் தகுதி தேர்வை ஆகஸ்டில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறையாவது இட ஒதுக் கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி வேறு மாநிலங்களில் செய்திருப்பதைப் போல தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்து, பின்தங்கிய சமுதாயத்தினரைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று விரிவாக தெரிவித்திருந்தேன்.எனினும் அதிமுக அரசு சார்பில் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.மேலும், ஜெயலலிதாவின் அதிமுக அரசு, 22-11-93ல் உச்சநீதிமன்றத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்று உறுதிமொழி கொடுத்தது. இதிலிருந்து அவர்கள் மனதில்எந்ந கருத்து வேரூன்றி இருக்கிறதோ, அதைத் தான் வாய்ப்பு கிடைக்கின்ற நேரத்தில் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது வெள்ளிடை மலை.இதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கும் வகையில் தான் தற்போது இந்த சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகளையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீடு கிடையாது என்று ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை சமூகநீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திமுக அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment