பள்ளியில் நடக்கும் மாணவர்களின் பிரச்னையை ஆசிரியர்களைக் கொண்டே தீர்த்துக் கொள்ள வேண்டும் என எஸ்.பி., தெய்வசிகாமணி அறிவுறுத்தினார்.
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மாணவி, வம்பாபேட் பகுதியைச் சேர்ந்த மாணவர் பனித்திட்டு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்து வருகின்றனர். மாணவிக்கும் மாணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, மாணவர், மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது. பிரச்னை குறித்து மாணவியின் பெற்றோர், மாணவர் மீது கிருமாம்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதனால், பனித்திட்டு வம்பாப்பேட் கிராமங்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது. மோதலை தவிர்க்கும் விதமாக ரூரல் எஸ்.பி. தெய்வசிகாமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், பாகூர் பொறுப்பு தாசில்தார் யஷ்வந்தையா, இன்ஸ்பெக்டர் மோகன்குமார், பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் பனித்திட்டு, வம்பாப்பேட் கிராம முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எஸ்.பி., தெய்வசிகாமணி பேசும்போது, "பள்ளியில் நடக்கும் மாணவர்களின் பிரச்னையை ஆசிரியர்களைக் கொண்டே தீர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி பிரச்னைகளை ஊரிலோ, கிராமத்தாரிடமோ சொல்வதன் மூலம் வீண் பிரச்னை ஏற்படுகிறது. இதனை காரணமாக வைத்து சிலர் சாதி மோதலை கிளப்பி, கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இது போன்ற தூண்டுதலுக்கு ஆளாகாமல், கவனமாக இருக்க வேண்டும். பாலியல் தொந்தரவு இருந்தால் உடனே போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டு"ம் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment