"மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதம் எடுத்தால், ஆசிரியர்களும் துப்பாக்கி எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்,” என ஆங்கில மொழி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேவியர் எச்சரித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பைரவ ரத்தினத்தை, பிளஸ்1 மாணவர், நேற்று முன்தினம் பாட்டிலால் தாக்கினார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் சில ஆசிரியர் கழகத்தினர் நேற்று சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில், ஆங்கில மொழி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் சேவியர் பேசியதாவது:தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்கள் தாக்கப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர கல்வித்துறை தவறுகிறது. அரசியலை நாங்கள் தான் கற்றுத் தருகிறோம். எங்களுக்கும் 'ரவுடியிசம்' தெரியும். மாணவர்களை அடிக்கக்கூடாது என்றால், 'ரிசல்ட்' மட்டும் எதற்காக கேட்கிறீர்கள். திருப்புவனம் சம்பவத்திற்கு அங்குள்ள ஆசிரியர்கள் மட்டும் ஒருநாள் விடுப்பு எடுத்து வந்துள்ளனர். தலைமை ஆசிரியர் மட்டும் பணி செய்கிறார். பள்ளிக்கூடத்தை இழுத்து மூடியிருக்க வேண்டும்.கோழை, அடிமைத்தனம் ஆசிரியர்களுக்கு வேண்டாம். அரசின் இலவசம் என்ற பெயரில் செருப்புக்களை சுமக்கிறோம். பள்ளிக்கூடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை எழுகிறது. மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை தூக்கினால், ஆசிரியர்களும் துப்பாக்கியை எடுக்கும் சூழல் உருவாகும், என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் சங்கம், ஆங்கில ஆசிரியர் கழகம், தமிழாசிரியர் கழகம், உயர், மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், வரலாறு ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் திருப்புவனம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த ஆசிரியர்களும் விடுப்பு எடுத்து பங்கேற்றனர். சி.இ.ஓ., கலெக்டரிடம் புகார் மனுக்கள் தரப்பட்டது.
No comments:
Post a Comment