‘தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது’’ என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
சிறப்பு கேயடு
பொது தேர்வினை எதிர்கொள்வதற்காக அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘வெற்றி உங்கள் கையில்’ என்ற வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சியை அடுத்த சோமசரம்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் தலைமை தாங்கினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடிய வகையில் சிறப்பு கையேட்டை அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:–
ரூ.45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் பொதுதேர்வுகளில் மாணவ–மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ‘வெற்றி உங்கள் கையில்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாணவ–மாணவிகளுக்கு பொது தேர்வினை எதிர்கொள்வது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக பிற மாநிலத்தினர் தமிழகம் வருகை தர விரும்புகின்றனர்.
100 சதவீதம் தேர்ச்சி
கல்வியில் சிறந்த அறிவு படைத்த மாணவர்கள் உருவாக வேண்டும் என்பதே முதல்–அமைச்சரின் எண்ணம். இன்னும் 10 வருடங்களில் கல்வித்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உயர்த்த வேண்டும் என எண்ணி முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
20 லட்சம் மாணவ–மாணவிகள்
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா திட்ட விளக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 10–ம் வகுப்பு தேர்வை 11 லட்சத்து 60 ஆயிரம் மாணவ–மாணவிகளும், 12–ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 81 ஆயிரம் மாணவ–மாணவிகளும் என மொத்தம் 20 லட்சம் பேர் பொது தேர்வுகளை எழுத உள்ளனர்.
மாணவர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் அரசு வழங்கி விட்டது. இனி படித்து அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவது உங்கள் கையில் தான் இருக்கு’’ என்றார்.
மாணவ–மாணவிகள்
நிகழ்ச்சியில் அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் ரத்தினவேல், குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இந்திராகாந்தி, சந்திரசேகர், திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணை மேயர் மரியம் ஆசிக், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் நிறுவன மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிகல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் வரவேற்று பேசினார். முடிவில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment