Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 7, 2012

    நிதியுதவிப் பள்ளிகளா, வர்த்தக மையங்களா? திரு எஸ். சபேஷ் அவர்களின் கட்டுரை!

    கல்வித் துறையில் சேவை மனப்பான்மை கொண்டவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அனுமதிக்கப்பட்ட "அரசு நிதியுதவிப் பள்ளிகள்' இன்று வர்த்தக மையங்களாக மாறி வருகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் கல்விப்பணியை சேவை மனப்பான்மையுடன் நடத்த முன்வருவோருக்கு, கட்டடங்களை இலவசமாகக் கொடுத்தால், அரசு அவர்களுக்கு அந்தப் பள்ளியை நிர்வகிக்க அனுமதி அளித்து, அப்பள்ளியில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளும் பொறுப்பையும் அளித்தது.

    இதனால் தமிழகத்தில் அப்போது அரசால் பள்ளிகள் தொடங்க முடியாத இடங்களிலெல்லாம் நிதியுதவிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதனால் பல ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றனர்.

    ஆனால், இன்று இப் பள்ளிகளில் பல, வர்த்தக வளாகங்களாக மாறி வருகின்றன. அரசு நிர்ணயித்துள்ள 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதப்படி இன்று 30 மாணவர்களை கொண்ட நிதியுதவிப் பள்ளிகள் 2 ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம். ஏனெனில், ஓராசிரியர் பள்ளி கூடாது என்ற கொள்கை இப்போது நடைமுறையில் உள்ளது.

    பொதுவாக நிதியுதவிப் பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடம் அந்தக் கல்வி ஆண்டின் ஜூலை 31ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் நிர்ணயிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு கருத்துரு அனுப்பப்படும்.

    இப்போதைய அரசின் உத்தரவுப்படி இது உண்மையானதுதான் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உறுதி செய்யவேண்டும்.

    இந்நிலையில் நிதியுதவிப் பள்ளிகளின் நிர்வாகத்தினர் இன்னாருக்குத்தான் வேலை என முதலிலேயே முடிவெடுத்து விடுகின்றனர்.

    அந்த "இன்னார்' நிர்வாகத்தின் உறவினராகவோ அல்லது அறக்கட்டளையின் நிர்வாகிக்கு உறவினராகவோ அல்லது நிர்வாகத்துக்கு அதிகத் தொகை வழங்க முன்வருபவராகவோ இருப்பார்.

    அரசு விதிகளின்படி 1 முதல் 5 வகுப்புக்கு குறிப்பிட்ட அளவே ஆண் ஆசிரியர்கள் இருக்க வேண்டும். "இன சுழற்சி' முறை பின்பற்றப்பட வேண்டும். விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

    வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின்படி பட்டியல் வாங்கி அதைப் பின்பற்ற வேண்டும் என அரசால் வழிகாட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கு "மெட்டுக்கு பாட்டெழுதும்' நிலைதான்.

    பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுமூப்பில் முன்னுரிமைப்படி விரைவில் பணி நியமனம் பெற வாய்ப்புள்ளதால் அவர்கள் நிதியுதவி பள்ளிகளைத் தேடி வருவதில்லை. ஆனால், இனசுழற்சி முறையில் அவர்களுக்கு கட்டாயம் பணி தரப்பட வேண்டும் என அரசாணை உள்ளது.

    எனவே அந்தப் பணியிடத்தை இழக்க விரும்பாத நிதியுதவிப் பள்ளிகள், தானாக ஒரு விண்ணப்பதாரரைத் தேடி "தக்க சன்மானம்' தந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள்பட்ட தேதிக்கு முன் தேதியிட்ட பதவி விலகல் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, பணி நியமனத்தை உறுதி செய்து விடுகின்றனர்.

    பின்னர் அவர் "தாமாக முன்வந்து குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பதவி விலகி விடுவார். அவ்வாறு விலகிய பணியிடம் மீண்டும் (உரிய விதிகளின்படி?) நிரப்பப்படும்.

    இவை அனைத்தும் அதிகாரிகள் துணையின்றி சாத்தியப்படுமா என்ன? இதில் பலவகைகளிலும் அதிகாரிகள் லாபமடைகின்றனர்.

    இந்நிலையில் நிதியுதவிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலை வேறு. இந்த மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளில் பங்கேற்க இயலாது.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரப்படும் கணினி வசதிகள், கற்றல் - கற்பித்தல் கருவிகள் எதுவும் நிதியுதவிப் பள்ளி மாணவர்களுக்குத் தரப்படமாட்டாது.

    இப்போது இப் பள்ளிகளை நடத்தும் நிர்வாகங்கள் தங்கள் மூதாதையர் இலவசமாக வழங்கிய இடத்தில் பள்ளியை ஓரங்கட்டி, வர்த்தக வளாகங்களை உருவாக்கி அதில் வருமானமும் சம்பாதிக்கின்றன.

    இதைத் தவிர்க்க, நிதியுதவிப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளத்தை நேரடியாக வழங்க எடுத்த அதிரடி முடிவைப்போல, இப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தையும் அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

    நிர்வாகத்துக்கு மேற்படி பள்ளி இயங்கும் இடத்துக்கான வாடகைத் தொகையைத் தந்து விடலாம். அதை விரும்பாத பள்ளிகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைத்துவிடலாம்.

    இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு உடனே எடுத்தால் மட்டுமே நிதியுதவிப் பள்ளிகள் வர்த்தக மையங்களாக மாறுவதைத் தடுக்க முடியும்.

    இதனால் மட்டுமே சேவை மனப்பான்மையுடன் இடத்தை தானமாக கல்விப் பணிக்கு அளித்த அக்கால தர்மவான்களின் கனவு நனவாகும்.

    No comments: