தொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு 2012-13 கல்வியாண்டு முதல், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக ரூ.500 உதவித்தொகை உயர்த்தி வழங்க தமிழக முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தொழில் திறன் மற்றும் அறிவுத் திறன் ஆகியவை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய முன்னேற்றத்தை உருவாக்கும் முக்கிய காரணிகளாகத் திகழ்வதாலும், திறன் பெற்ற பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், இளைஞர்களுக்கு திறன் உருவாக்கும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.
தமிழ் நாட்டில் 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் 39 பொறியியல் மற்றும் 17 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையங்களில் பயின்று வரும் மாணவர்கள் பெரும்பாலும் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அவர்கள் சார்ந்த இனம்/பெற்றோரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.140, ஆதி திராவிட இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு ரூ.150, பழங்குடியினர் மற்றும் பர்மா/இலங்கை/வியட்நாம் நாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு ரூ.175, பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.50,000 என்ற அடிப்படையில் ரூ.100 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உதவித்தொகை போதுமானதாக இல்லாத காரணத்தால், பெரும்பாலான மாணவர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலைக் காரணமாக இந்நிலையங்களில் சேராமல், பணிக்குச் சென்று விடுகின்றனர்.
எனவே அதிக அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேருவதை ஊக்குவிக்கும் வகையிலும், அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும், அம்மாணவர்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையினை 2012-13 கல்வியாண்டு முதல் வருமான உச்சவரம்பு மற்றும் இன வேறுபாடின்றி, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக ரூ.500 உயர்த்தி வழங்க தமிழக முதலவர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக கூடுதலாக ரூ.12 கோடியே 94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant), டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் (Desktop Publishing Operator), கம்மியர் கணினி வன் பொருள் (Mechanic Computer Hardware), தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு (Information Technology and Electronic System Maintenance), தகவல் தொழில் நுட்பம் (திறன் மிகு மையம்) IT (COE) ஆகிய 5 தொழில் பிரிவுகளில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை பெறும் மாணவர்களின் கணினி தொடர்பான திறனை மேலும் மேம்படுத்தும் வகையிலும், அவர்கள் கணினி தொடர்பான முன்னேற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு வசதியாகவும், அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கவும், இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.3 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், இந்த நிதியாண்டில் 3,476 மாணவர்கள் பயன் பெறுவர்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர் நலனுக்காக அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளினால், ஏழை எளிய மாணவர்கள், அதிக அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சேர்ந்து பயிலவும், வருங்காலத்தில் தொழில் திறன் மிக்க மனித வளம் உருவாகவும் வழி ஏற்படும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment