இனி சிறார்களை எந்தத் தொழிலிலும் பயன்படுத்த முடியாது. ""சிறார் தொழில்முறை (தடை மற்றும் ஒழுங்காற்று) சட்டம்-1986''-ல் இதற்கான சட்டத் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.
அமலில் உள்ள குழந்தைத் தொழிலாளர் முறை தடைச் சட்ட விதிமுறைகளின்படி பாதுகாப்பற்ற, ஆபத்தான தொழில்களில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களைப் பணியமர்த்துவது குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளிக்க முடியும். தற்போதைய சட்டத் திருத்தத்தின்படி பாதுகாப்பானதும், ஆபத்து இல்லாததுமான தொழில்களிலும்கூட, அதாவது எத்தகைய தொழிலிலும் சிறார்களைப் பணியமர்த்துதல் குற்றமாகக் கருதப்படும்.
இந்தப் புதிய விதிமுறையைப் புகுத்த வேண்டியதன் காரணம், அனைத்து சிறார்களும் பள்ளிசென்று கல்வி பயில வேண்டும் என்பதுதான். "அனைவருக்கும் கல்வி' சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிறார்கள் பள்ளி செல்லாமல் தவிர்ப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாகத்தான் இந்தப் புதிய விதிமுறையை அரசு புகுத்துகிறது. இதற்காக மத்திய அரசுக்குப் பாராட்டுகள்.
ஆபத்தில்லாத, பாதுகாப்பான தொழில்களில் சிறார்களை ஈடுபடுத்தலாம் என்பதே தவறு. தொழிற்துறை வேண்டுமானால் ஆபத்தில்லாததாக, பாதுகாப்பானதாக இருக்கலாம். ஆனால், அதை நடத்துபவர்கள் நேர்மையற்றவர்களாக இருந்தால், அந்தத் தொழில் நிச்சயமாக சிறார்களுக்கு பாதுகாப்பற்றதுதான். குழந்தைப்பருவ மகிழ்ச்சிக் குலைவைத் தடுக்கும் இந்தச் சட்டத் திருத்தம் அவசியமானது.
தற்போது இந்தியாவில் பள்ளி செல்லாமல் சுமார் 46 லட்சம் சிறார்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் பயன் அடைந்துவிடுவார்கள் என்று முழுமையாக நம்புவதற்கில்லை. எந்தத் தொழிலிலும் சிறார்களைப் பணியமர்த்தக்கூடாது என்பதால், அனைத்துச் சிறார்களும் பள்ளிக்குச் சென்றுவிடுவார்கள் என்று அரசு நம்புமேயானால், அதுவும் பேதைமை!
சிறார்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் தங்கள் கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் செய்யும் கட்டடத் தொழிலாளியை இந்தச் சட்டம் என்ன செய்துவிட முடியும்? பட்டுச்சேலையில் ஜரிகை கோத்து வாங்க தன்னுடன் மகன் அல்லது மகளை உதவிக்கு அமர்த்தும் நெசவாளித் தந்தையை இந்தச் சட்டம் என்ன செய்துவிட முடியும்? தாய்க்கு உதவியாக தீக்குச்சிகளை அடுக்கித் தரும் பிள்ளைகளை, "தொழிலாளி' என்று வகைப்படுத்த முடியுமா?
அந்தப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சம்பளத்துக்காக வேலைக்கு அமர்த்தவில்லை; குழந்தைகள் உதவி செய்கிறார்கள் என்றே சொல்லக்கூடும். அனைவருக்கும் கல்வி சட்டத்தை மேலும் முழுமை செய்யும் வகையில், 14 வயதுவரை பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்குத் தண்டனை அளிக்கும்விதமாகச் சட்டமா இயற்றிவிட முடியும்? குழந்தைகள் அனைவரும் கல்வி பெறவேண்டும் என்கிற நோக்கம் உன்னதமானது. ஆனால், அதை உறுதிப்படுத்துவது எளிதல்ல. அத்தகைய நிலைமை ஏற்படாத வரையில், குழந்தைகள் அனைவரும் பள்ளிக் கல்வி பெறுவது நிறைவேறாது.
சென்னை போன்ற பெருநகரங்களில் அரசுப் பள்ளிகள் குடிசைப்பகுதிகளுக்கு அருகிலேயே இருந்தும், இலவசக் கல்வி அளிக்கப்பட்டாலும், சத்துணவு கிடைத்தவுடன் பெரும்பாலான வெளியேறும் நிலைமைதான் தொடர்கிறது. பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பள்ளி செல்வது மதிய உணவுக்காக என்றுதான் அனுப்புகிறார்களே தவிர, கல்வி கற்க என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. ஆசிரியர்கள் உணவு கொடுத்தார்களா என்பதைக் கவனிக்கிறார்கள். கல்வி புகட்டினார்களா என்பதைக் கேட்பதே இல்லை. ஏழை மக்களிடம் தங்கள் குழந்தைகள் கல்வி கற்பது அடிப்படை உரிமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தாதவரை, இந்தச் சட்டத்தால் மட்டுமே அதிக பயன் ஏற்பட்டுவிடாது.
இத்துடன், இன்னொரு திருத்தத்தையும் செய்ய அரசு ஒப்புதல் தந்துள்ளது. அதாவது, 14 வயது முதல் 18 வயதுள்ளவர்களை வளர்இளம் பருவத்தினர் என்று அடையாளப்படுத்துவதோடு, அவர்களை ஆபத்தில்லாத, பாதுகாப்பான தொழில்களில் ஈடுபடுத்தலாம் என்று வரன்முறை செய்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி சட்டத்தின்படி எட்டாவது வகுப்பு வரை மட்டுமே இலவசக் கல்வி சாத்தியம். "குழந்தை ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கே அவமானம்' என்று சொன்னாலும், வாழ்க்கை நெருக்கடியும் விலைவாசி உயர்வும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தையும் வாட்டி வதைக்கிறது. இத்தகைய நிலையையும் அரசு தவிர்க்க விரும்பினால், "தொழில்புரியும் வளர்இளம் பருவத்தினருக்கான பள்ளி'களை உருவாக்க வேண்டியது அவசியம். 14 முதல் 18 வயதுள்ள இந்த மாணவர்கள், இப்பள்ளிகளில் படித்துக்கொண்டே, ஆபத்தில்லா தொழில்களில் பணிபுரிய முடியும்.
இந்தியாவிலுள்ள எல்லா குழந்தைகளும், ஏன் எல்லா பிரஜைகளும், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற நிலைமையை சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும் நாம் எட்டவில்லை என்பதே தலைகுனிவு. இனிவரும் தலைமுறையினராவது எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகவும், கல்வி அறிவுபெற்றவர்களாகவும் வளர வேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் காரணமாக எழுந்ததுதான் எல்லோருக்கும் கல்வித் திட்டம். இது முழுமையான வெற்றியைப்பெற வேண்டுமானால், அடிப்படை வறுமை அகற்றப்பட்டால் மட்டுமே சாத்தியம்!
அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்பதில் ஐயமே இல்லை. சற்று தொலைநோக்குப் பார்வையுடன், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் வகையிலான பொருளாதாரத் திட்டங்களை ஊக்குவிக்காமல், அடிமட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் உண்மையான அக்கறை காட்டினால் மட்டுமே, அரசின் நோக்கம் ஈடேறும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது!
No comments:
Post a Comment