கம்பத்தை சேர்ந்த இல்லத்தரசி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் மாநில அளவில் முதலிடம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.தேனி மாவட்டம் கம்பம் 26வது வார்டு ராமைய கவுடர் தெருவை சேர்ந்தவர் ஹரிபாஸ்கர். இவர் கம்பத்தில் உள்ள முக்தி விநாயகர் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருள்வாணி. திண்டுக்கல் அருகேயுள்ள
கே.புதுக்கோட்டையை சேர்ந்தவர். இவர் திருமாணமாகி கம்பத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் சகானாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. அருள்வாணி எம்ஏ பொருளியல் பட்டதாரி. திண்டுக்கல் அம்மன் கல்வியியல் கல்லூரியில் பி.எட். சமூக அறிவியல் படித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினார். இந்த தேர்வு முடிவுகளை நேற்று காலை 10 மணிக்கு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் மொத்தம் 150க்கு 125 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.கணவர் கொடுத்த பயிற்சியால் சாதனை: தனது சாதனை குறித்து, அருள்வாணி கூறுகையில், வீட்டில் கடுமையான வேலைகளுக்கு இடையே முதல் மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனது கணவர் ஆசிரியராக வேலை பார்ப்பதால் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள முக்கிய வினா,விடைகளை எனக்கு பயிற்சி கொடுப்பார். மேலும் அவர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக நான் மாநில அளவில் முதல் இடம் பெற முடிந்தது என்றார்.
No comments:
Post a Comment