அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், இந்திய மருத்துவ படிப்பில் காலியாக உள்ள, 96 இடங்களுக்கான கலந்தாய்வு, வரும், 20ம் தேதி, சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உட்பட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, கடந்த மாதம், இரு கட்டங்களாக நடந்தது. இதில், நிரம்பிய இடங்கள் போக, 96 இடங்கள் காலியாக உள்ளன.
அரசு கல்லூரிகளில், சித்தா 3, ஹோமியோபதி 3, ஆயுர்வேதம் 3, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் 1 என, 10 இடங்களும், தனியார் கல்லூரிகளில், சித்தா 6, ஹோமியோபதி 48, ஆயுர்வேதம் 8, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் 24 என, 86 இடங்களும் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, வரும், 20ம் தேதி, சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது. இதுதொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
முந்தைய கலந்தாய்வில் பங்கேற்று, அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், சுய நிதி கல்லூரிகளை தேர்வு செய்யாமல் காத்திருப்போர், சுய நிதி கல்லூரிக்கு இட ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் இணைந்தோர், அரசு, சுய நிதி கல்லூரிகளில் வேண்டிய துறை கிடைக்காததால், பிற மருத்துவ முறை கல்லூரிகளில் சேர்ந்தோரும், 20ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெறும்போது, நவம்பர், 15ம் தேதிக்கு முன், எடுத்த, 5,500 ரூபாய்க்கான வரைவோலை சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு, காலை, 9:00 மணிக்கு துவங்கும்; பங்கேற்போர் அனைவரும், 10:00 மணிக்குள் கையெழுத்திட வேண்டும்; தாமதமாக வருவோர் பங்கேற்க முடியாது. இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment