சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், 2ம் வகுப்பு மாணவன் ஒருவனை, பள்ளி நிர்வாகத்தினர் அடித்து உதைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், சூரமங்கலம், ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணகுமார், மனைவி லதிகா ஆகியோர், மகன் ஷாம் சுந்தர், 8, அழைத்துக் கொண்டு நேற்று, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் மாணவன் ஷாம் சுந்தர் உடலில், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக்கட்டு காணப்பட்டது. அவனை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து மாணவனின் தந்தை கிருஷ்ணகுமார் கூறியதாவது: சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள, ஸ்கை கிட்ஸ் பப்ளிக் பள்ளியில், மூன்று ஆண்டுகளாக என் மகன் ஷாம்சுந்தர் படித்து வருகிறான். இந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து போன் வந்தது. அதில், "உங்களது மகன் நடத்தை சரியில்லை என்பதால், கண்டித்து வைக்க வேண்டும்" என கூறினர்.
நான் வெளியூரில் இருந்ததால், மனைவியிடம் இதை கூறினேன். ஆனால், வீட்டுக்கு வந்த பின் பார்த்தால், என் மகனின் உடலில் பல இடங்களில் பலத்த காயம் இருந்தது. விசாரித்ததில், பள்ளி நிர்வாகி ப்ரியா மற்றும் ராஜேஷ் உள்ளிட்டோர், செருப்பு காலால் எட்டி உதைத்தும், தடியால் அடித்ததாகவும் கூறினான். இரவு முழுவதும் காய்ச்சலாலும், காயத்தாலும், அவதிப்பட்ட மகனை சிகிச்சைக்கு சேர்த்துள்ளோம்.
ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் இப்பள்ளி நிர்வாகி, போலீஸ் உயர் அதிகாரி என்பதாலும், அவரது தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்பதாலும் மகனை அடித்து உதைத்தது மட்டுமின்றி, "எங்கு வேண்டுமானாலும், புகார் செய்து கொள்ள கவலையில்லை, எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என மிரட்டல் விடுக்கிறார். பள்ளிக்கு அங்கீகாரம் இன்னும் பெறப்படவில்லை. இதில் படிக்கும் மற்ற மாணவர்களின் நலனுக்காகவே, பள்ளி நிர்வாகத்தின் மீது, புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ஸ்கை கிட்ஸ் பப்ளிக் பள்ளி நிர்வாகி ப்ரியாவிடம் கேட்ட போது, "ஷாம் சுந்தர் மற்ற மாணவ, மாணவியரிடம் வயதுக்கு மீறிய ஆபாசத்துடன் பேசி வந்ததால், அவனை கண்டித்தோம். மற்றபடி யாரும் அவனை அடிக்கவில்லை. அவனுக்கு ஒழுக்கம் வர வேண்டும் என்பதற்காக, கண்டித்தது தவறா?" என்றார்.
இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment