Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 19, 2012

    அண்ணாவின் ஆட்சி - இரா. செழியன் அவர்களின் கட்டுரை

    ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாள் விழாவாக தமிழகத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு பலர் என்னைக் கேட்டுக்கொள்வது உண்டு. அதில் பெரிய சிக்கல் இருக்கிறது. அவருடைய வாழ்க்கை, தமிழக அரசியலுடன் இரண்டறக் கலந்திருக்கிறது.
    அதனால் அந்த முயற்சி தமிழக அரசியல் வரலாற்றை எழுதுவதாக ஆகும். அந்த முயற்சியில் இப்பொழுது ஈடுபடாமல், கல்லூரிப் படிப்பை முடித்து, 1935 இல் பொதுவாழ்வில் சமுதாய நீதிக்கான இயக்கத்தில் சேர்ந்த அண்ணா எவ்வாறு அரசியலில் நேரடியாக ஈடுபட்டார், அதன் மூலம் அவருடைய தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எவை சிறந்தவைகளாக இருந்தன என்பதை மட்டும் சுருக்கமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்,

     அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்தார், குடும்பவளத்தை, அதன் பின்னணியை, பெருமையை வைத்து நாட்டின் முதல்வராக வருவதற்கு எத்தகைய பாரம்பரியமும் அன்றைய அரசியலில் அவருக்கு இல்லை. எளியவராகப் பிறந்தார், எளியவராக வளர்ந்தார், எளியவர்களுக்காக பொதுவாழ்வில் ஈடுபட்டார், கடைசிவரை எளியவராகவே இருந்தார்.

     தான் தொடங்கிய கழகத்தைப் பாசமும் நேசமும் மிக்கக் குடும்பமாக வளர்த்தார், அவருடைய குடும்பத்தில் பெற்றோருக்கு அவர் ஒரு பிள்ளையாகத்தான் இருந்தார்; ஆனால் பொது வாழ்வில் பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினருக்கு பிள்ளையாக, அந்தக் குடும்பப் பிள்ளைகள் அனைவருக்கும் "அண்ணனாக' ஆனார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தனக்காக, தன் குடும்பத்துக்காகப் பயன்படுத்தாமல், நாட்டுக்காக, நாட்டின் மக்களுக்காகப் பயன்படுத்தினார்.

     கல்விச் சான்றோர்கள் சிலர் தந்த உதவியால் எம்.ஏ. வரை பயின்றார். அவரின் அறிவும் ஆற்றலும் அவருடைய ஆசிரியர்களால் பாராட்டப்பட்டன என்றாலும், வாழ்க்கையை வளப்படுத்தும் வருமானம் மிக்க ஒரு வேலையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பாமல், தாம் பெற்ற அறிவை, திறமையை, ஆக்கப்பணிகளில், பொதுமக்களுக்குத் தன்னை அர்ப்பணிப்பதில் ஈடுபட்டார்.

     முதலில் அவருடைய நோக்கம் "சமுதாய நீதி'யாக இருந்தது. பிறப்பினாலும் பொருளாதாரத்தாலும் சமுதாயத்தில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோள் அவரது வழிகாட்டியாக ஆனது. ஆரம்பத்தில் நீதிக்கட்சியின் "விகிதாசார முறை'

     ஒதுக்கீட்டுக் கொள்கை அவரை ஈர்த்தது. ஆயினும் நீதிக்கட்சியில் பிரபுக்கள், ஜமீன்தார்கள், ராஜாக்கள் தலைவர்களாக இருப்பதை மாற்றி அமைக்க அவர் செயல்பட்டார். அந்த முயற்சியில்தான் தந்தை பெரியாரின் இயக்கத்தில் இணைந்தார். அதிலும், வெள்ளையர் ஆட்சியிலிருந்து இந்தியா அடைந்ந விடுதலை வரவேற்கத்தக்கது என்ற விதத்தில் தமது கருத்தை வலியுறுத்தினார்.

     இறுதியில் 1949 செப்டம்பர் 17 இல் வெட்ட வெளியில் கொட்டும் மழையில், கையில் காசில்லாமல், மனதில் மாசில்லாமல், தம் தம்பிமார்களுடன் தனிப்பட்ட அமைப்பை - திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பிக்கும் நிலைமைக்கு அண்ணா தள்ளப்பட்டார்.

     அவரை நோக்கி ஏளனங்கள், இழிமொழிகள், பழிதூற்றல்கள் வந்த வண்ணம் இருந்தாலும், கருமமே கண்ணாயினார் என்ற வகையில் அவர் கழகத்தை வளர்த்தார்.

     மக்கள் கவனத்தையும், மக்களின் ஆதரவையும் பெறும் வகையில் எழுத்தில், பேச்சில், கதைகளில், நாடகத்தில் கருத்துகளை எடுத்துரைத்தார். நாடகங்களில் அவரே நடித்தார். திரைப்படக் காட்சிகளில் அவருடைய ஆற்றலும் திறமையும் மக்கள் முன் வைக்கப்பட்டன.

     சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் 1952ஆம் ஆண்டில் நடந்தபொழுது அதில் போட்டியிடுவது பற்றி கழகத்தில் விவாதம் வந்தது. "தேர்தலில் போட்டியிட நாம் இன்னமும் வளரவில்லை, அதற்காக மக்களையும் நாம் தயார் செய்யவில்லை. அதேசமயம் நம் கொள்கையையும் குறிக்கோளையும் ஆதரிப்பவர்களுக்கு நாம் அதிகாரபூர்வமாக ஆதரவு அளிப்போம்' என்று அண்ணா சொன்னார்.

     காங்கிரசல்லாத எதிர்தரப்பினர் தி.மு.க. ஆதரவுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றிபெற்றனர். தேர்தல் பணிகளில் கழகத் தோழர்களுக்கு முதல் தடவையாக பயிற்சி கிடைத்தது.

     1957 தேர்தலுக்குமுன் 1956 மே மாதத்தில் திருச்சியில் கூடிய கழகத்தின் மாநில மாநாட்டில் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய விவாதம் மீண்டும் வந்த நேரத்தில், ஜனநாயகவாதியான அண்ணா, "இந்தப் பிரச்னையை மாநாட்டுக்கு வந்துள்ள பிரதிநிதிகள் அனைவரின் முடிவுக்கு விடுவோம்' என்றார். அதன்படி, பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமா போட்டியிட வேண்டாமா என்று கூற வாக்குச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு தேர்தல் வைக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்கு 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களின் ஆதரவு கிடைத்தது.

     1957 தேர்தல் முடிவில் திமுகழகம் 15 சட்டமன்ற உறுப்பினர்களையும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா வெற்றி பெற்றார்.

     1962 பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 50 உறுப்பினர்களையும் மக்களவைக்கு 7 உறுப்பினர்களையும் பெற்றது. அந்தத் தேர்தலில்தான் நான் பெரம்பலூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குச் சென்றேன். ஆனால் காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோற்கடிக்கப்பட்டதால் நாங்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தோம். அண்ணா எங்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடைய சட்டசபைக்கானத் தேர்தல் தோல்வி மற்றொரு வகையில் கழகத்தின் பெயர் டெல்லித் தலைநகரில் பேசப்படும் அளவில், மாநிலங்களவையில் அண்ணாவை ஓர் உறுப்பினராக ஆக்குவதற்கு வழிவகுத்தது.

     அண்ணாவின் தோல்வியுடன் கழகத்தின் முடிவு வந்துவிட்டதாக மாற்றுக் கட்சியினர் முடிவு கட்டினர். தேர்தலில் திமுகழகத்தினர் நிற்க முடியாத அளவுக்கு அடிப்படைச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய ஆட்சி முற்பட்டது. அதையும் கழகம் சமாளித்தது.

     1967 தேர்தலுக்கு முன்னதாக, தமிழ் நாட்டில் சுதந்திரா கட்சி (ராஜாஜி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (பி.ராமமூர்த்தி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (காயிதே மில்லத் முகமது இஸ்மாயில்) ஆகிய கட்சிகளுடன் கழகத்தின் சார்பில் அண்ணா கூட்டணி அமைத்தார்.

     1967 பொதுத்தேர்தலில் கழகம் மக்களவைக்கு 24 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது. சட்டசபையில் 138 இடங்களைப் பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.

     அண்ணா மாநில முதலமைச்சராக ஆனார். 1935இல் பொதுவாழ்வில் ஈடுபட்டபொழுது அவர் வற்புறுத்திய பல்வேறு சமுதாயத் திட்டங்களை, ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

     தமிழ்நாடு பெயர் மாற்றம், சீர்திருத்தத் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம் எனப் பலருக்கும் தெரிந்த பட்டியலை இங்கு விரித்துரைக்காமல் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

     1967இல் தமிழ்நாட்டில் பல நகரங்களில் கள்ளச்சாராயம், வார்னீஷ் போன்றவற்றை அருந்தி மாண்டவர்கள் எண்ணிக்கை ஏராளமாக உயர்ந்தது. 21-9-67இல் மது ஒழிப்பிற்கான ஆய்வுக் கூட்டத்தை சென்னையில் கூட்டி, அதில் அண்ணா கூறினார், "குடித்துவிட்டு வீட்டில் மனைவி மக்களை தாக்கும் குடிகாரர்களால் அடிபடும் பெண்களின் அழுகுரல் அதிகமாகிறது. அந்த அழுகை ஒலியை என்னால் தாங்கமுடியவில்லை. இனி மதுக்கடை ஒன்றுகூட திறக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்' என்றார்.

     அதற்குப்பின், முழு மதுவிலக்கை எவ்வாறு அமலாக்கலாம் என்பதற்கும் திட்டமிட்டார்.

     ஆந்திரத்தின் முதலமைச்சர் பிரமானந்தரெட்டி அண்ணாவைப் பாராட்டினார். "எங்களைவிட அண்ணா உண்மையான காங்கிரஸ்காரராக, காந்தியவாதியாக இருக்கிறார்' என்றார்.

     1968இல் கொடும் நோய்க்கு ஆட்பட்டு அவருடைய வாழ்வும் அவருடைய ஆட்சியும் குறுகிய காலத்தில் முடிவடையாமல் இருந்தன என்றால், சமுதாய நீதிக்கான பல திட்டங்களை அண்ணா உறுதியாக நிறைவேற்றியிருப்பார்.

     குடியரசுத் தலைவராக பணியாற்றிய ஆர். வெங்கடராமன் ஓய்வுபெற்றதும் டெல்லியில் தங்கியிருந்தார்; அங்கு செல்லும்பொழுது அவரைச் சந்திப்பேன், உற்சாகமாக உரையாடுவார். இருவரும் பட்டுக்கோட்டைவாசிகள்.

     2005இல் ஒருமுறை அவரைச் சந்தித்தபொழுது கூறினார், "இந்தியாவில் இருவருக்கு ஏற்பட்ட அகால மரணம், நாட்டிற்கு பெரிய இழப்பாகும். ஒருவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி - அவர் நீண்டகாலம் பிரதமராக நீடித்திருந்தால், இந்தியா நேர்மையான நாடாக வளர்ந்திருக்கும். இன்னொருவர் அண்ணாதுரை; அண்ணா 59 வயதிலேயே இறக்காமல் தொடர்ந்து முதலமைச்சராக வாழ்ந்திருந்தால், இந்தியாவின் கூட்டாட்சி முறை வலுப்பெற்றிருக்கும்'.

     மாற்றாரும் மதித்துப் போற்றிய அண்ணா மக்கள் நலன் ஒன்றையே மனதில் கொண்டு ஆட்சி நடத்தினார்.

    No comments: