சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, அந்தந்தக் கல்லூரிகளிலேயே மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவரது செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அதே கல்வி நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment