கோவை மாநகராட்சி பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி வகுப்பில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லாததால், கல்வி போதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. கோவை மாநகராட்சியில், துவக்கப்பள்ளிகள் - 41, நடுநிலைப்பள்ளிகள் -14, உயர்நிலைப்பள்ளிகள் -11, மேல்நிலைப்பள்ளிகள் - 16 உள்ளன. இப்பள்ளிகளில், 23 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பது பள்ளிகளில் முன்பிருந்தே ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் உள்ளன. அறிவியல் மற்றும் கலைப்பிரிவு என, இரண்டிலும், ஆங்கில வழிக்கல்வி உள்ளது. மற்ற மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில், அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அனைத்து உயர்நிலைப் பள்ளிகளி லும் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒரு சில பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி இருந்தது. கடந்த கல்வி ஆண்டில் இருந்து அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தமிழ்வழிக்கல்வியில் படிக்க, 952 மாணவர்கள்; ஆங்கில வழிக்கல்வியில் படிக்க, 679 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உயர்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக்கல்வியில் 700 பேரும், ஆங்கில வழிக்கல்வியில் படிக்க 213 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேல்நிலைப்பள்ளியில், தமிழ் வழிக்கல்வியில் படிக்க, மூவாயிரத்து 216 பேரும், ஆங்கில வழிக்கல்வியில் படிக்க, இரண்டாயிரத்து 332 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில், ஆங்கில வழிச்சேர்க்கைக்கு மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கிறது. ஆனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஆங்கில வழிச்சேர்க்கைக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதேபோன்று, மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகளில், ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கை அதிகமுள்ளது.
ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால், கல்வி போதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், 384 ஆசிரியர்கள்; உயர்நிலைப்பள்ளிகளில், 113 ஆசிரியர்கள்; துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 107 ஆசிரியர்கள்; துவக்கப்பள்ளிகளில், 201 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.மேல்நிலைப்பள்ளிகளில், 30 ஆசிரியர்கள் பணியிடமும், துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், 20 சதவீதம் பணியிடங்களும் காலியாக உள்ளன. ஆங்கில வழிக்கல்விக்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், இதே ஆசிரியர்களை கொண்டு அந்த வகுப்புகளும் சமன் செய்யப்படுகின்றன.
காலிப் பணியிடங்களை, டி.ஆர்.பி., மூலம் நிரப்பும் வரையிலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.மாநகராட்சி கல்வி அலுவலர் ரவி கூறுகையில், ''கடந்த ஆண்டில் இருந்து, மாநகராட்சி அனைத்து பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில், ஆறாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பில், ஆங்கில வழிக்கல்விக்கு சேர்க்கை அதிகமுள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் குழந்தைகளை படிக்க வைப்போர், அதன்பின், மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
''ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ஆசிரியர் தேவையுள்ள பள்ளிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் காலி பணியிடத்தை நிரப்ப, அரசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment