குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு அரசு பள்ளிகளில் படித்து 10 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தொழிலாளர் ஆணையர் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார். இக்கடிதத்தை மாணவரின் வீட்டிற்குச் சென்று நேரில்வழங்கவும் மாவட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி செல்லும் வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தை களை மீட்டு கல்வி கற்கச் செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக மத்திய அரசின் நிதி உதவியுடன் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம் தமிழகத்தில் சென்னை, கோவை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகள், செங்கல் சூளைகள், கடைகள், ஆலைகள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றிய 9 முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இச்சிறப்புப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கப்பட்டு பின்னர் அருகே உள்ள அரசு பள்ளியில் தொடர்ந்து கல்வி பயிலவழிவகை செய்யப்படுகிறது.இவ்வாறு குழந்தைத் தொழிலா ளர்களாக இருந்து மீட்கப்பட்டு அரசு பள்ளியில் பயின்று 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்குஅதிகமாகவும், பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் ஆயிரத்துக்கும் அதிகமாகவும்மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் தனித்தனியாக அவர்களது பெயர், முகவரி, மதிப்பெண்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு மாநில தொழிலாளர் ஆணையர் அமுதா பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கு அனுப்பியுள்ள இந்த பாராட்டுக் கடிதத்தை அலுவலர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கவும் தொழிலாளர் ஆணையர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 45 மாணவ, மாணவிகளில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 15 பேருக்கும், பிளஸ்-2 தேர்வு எழுதிய 81 மாணவ, மாணவிகளில் ஆயிரத்தும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற 9 பேருக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் பாராட்டுக் கடிதங் களை வழங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment