Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 6, 2014

    தெரிந்து கொள்வோம் - பிறப்பு சான்றிதழ்

    இந்தியச் சட்டப்படி குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்து ஆவணங்களையும் பெற வயதுச் சான்றாக பயன்படுவது பிறப்புச் சான்றிதழ். ஏன் திருமணத்திற்கே கூட வயது சான்றிதழ் கட்டாயமாகிறது. அதேபோல வாரிசுகளின் உரிமை, சொத்துரிமை, அரசு சலுகைகள் போன்றவற்றைப் பெற இறப்புச் சான்றிதழ் அவசியமாகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பிறப்பு மற்றும், இறப்புச் சான்றிதழைப் பெறுவது எப்படி? விவரங்கள் இங்கே.


    பிறப்பைப் பதிவு செய்வது கட்டாயமா?

    பல்வேறு விஷயங்களுக்காகப் பிறந்த தேதியை ஆவணப்படுத்துவது கட்டாயமாகிறது. இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக, கிராம/நகரப் பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

    எங்கே பதிவு செய்வது?

    ஒருவர் பிறப்புச் சான்றிதழ் பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேன்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

    ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, அந்த பகுதி காவல்துறை மூலம் பிறப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
    எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்?

    • பிறப்பை 21 நாட்களுக்குள்ளும், இறப்பை ஒருவாரத்திற்குள்ளும் பதிவு செய்ய வேண்டும்.

    • பிறப்பு அல்லது இறப்பிற்குப் பின்னர் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டால் பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழைச் சம்பந்தப்பட்ட பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் பெற முடியும். நகரம் அல்லது மாநகரம் என்றால், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணமும் உண்டு.
    கட்டண விபரம்:
    மூன்று வாரங்களுக்குள் இலவசமாகவும், அதற்கு மேல் ஒரு மாதம் வரை 5 ரூபாயும், ஓராண்டிற்கு மேல் ரூபாய் 10/- மற்றும் மாவட்ட நீதிபதி அவர்களின் ஆணையும் தேவை.

    மருத்துவமனையில் பிறப்பைப் பதிவு செய்தல்:

    • •மருத்துவமனையில் நடக்கும் பிறப்புகள் அனைத்தும் மாநகராட்சிக்குத் தெரிவிக்கப்படும்
    • •மருத்துவமனை சான்று கிடைத்தவுடன் ஒரே நாளில் மாநகராட்சியால் பிறப்புச்சான்று வழங்கப்படும்.
    • •பிறப்புச்சான்றை அந்தந்த மாநகராட்சியின் இணையதளத்தில் இலவசமாகப் பெற முடியும்
    • •குழந்தையின் பெயரை ஓராண்டு வரை மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

    எத்தனை நகல்கள் பெற முடியும்?

    இச்சான்றிதழ் எத்தனை நகல்களில் வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்காக உரிய கட்டணங்கள் கட்ட வேண்டியிருக்கும். இதற்காக, ஒரு தனி வெள்ளைத் தாளில் ஒரு வேண்டுகோளை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் இரண்டு ரூபாய்க்கான நீதிமன்ற வில்லையை ஒட்டி, அதனுடன் அதற்கான சான்றுகளாக மனுதாரரின் குடும்ப அட்டை அல்லது ஏதாவது முகவரிச் சான்று, குழந்தையின் பெயருடன் கூடிய பள்ளிச் சான்று போன்றவற்றை இணைத்து விண்ணப்பித்தால் வட்டாட்சியர் அவ்விண்ணப்பத்தின் மீது உரிய விசாரணை செய்து, வேண்டுகோள் உண்மையென முடிவு செய்யும்பட்சத்தில், குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கே வரவழைத்துப் பெயர் பதிவு செய்து மீண்டும் அப்பதிவேட்டை அந்தச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே அனுப்பிவைப்பார்.

    பிறப்பு / இறப்புச் சான்றிதழ்களில் மாற்றங்கள்

    பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர்.

    அப்படியான சூழலில் சரியான தகவல்களை ஆதாரத்துடன் அளித்து திருத்தங்கள் செய்ய வேண்டுகோள் கடிதம் கொடுக்க வேண்டும்.
    குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில் மாற்ற முடியுமா?
    பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம்; அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பதிவானபின் குழந்தையின் பெயர் மாற்றப்பட மாட்டாது. பதிவான பெயரை அரசு கெஜெட் மூலமே மாற்ற முடியும்.
    இந்திய பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்தால்:

    • இந்தியாவில் உள்ள ஒரு கணவனும் மனைவியும் பணி நிமித்தமாக, அல்லது குழந்தைப்பேறு மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் பிறப்பு அங்குள்ள தூதரக அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும்.

    • ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவருக்கு உயர் மருத்துவக் காரணங்களுக்காக அவருடைய உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நடவடிக்கைகளின் போது அந்த நபர் இறந்து விட்டால், அங்குள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.

    பயணத்தின் போது குழந்தை பிறந்தால்:

    • பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு. ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல், ஒருவர் இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும்.

    • விமானத்தில் அல்லது கப்பலில் பயணிக்கும் பொழுது குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு அல்லது இறப்புப் பதிவு செய்யப்படவேண்டும். எரிபொருள் நிரப்ப அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த விமானம் அல்லது கப்பல் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தப்பட்டால் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார்களோ அங்குதான் பதிவு செய்யவேண்டும்.

    இவள் பாரதி
    நன்றி: புதிய தலைமுறை

    1 comment:

    VU2WDP said...

    பல நகராட்சி தமிழில் பிறப்பு சான்று தர மறுக்கிறது. ஆனால் அங்கு தமிழ் வாழ்க என்று விளம்பரவிளக்கு எரிகிறது.