அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தொடர்பாக 8 வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கிப்சன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1.16 லட்சத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2009-ஆம் ஆண்டு ஊதிய விகிதப்படி அடிப்படை ஊதியமாக ரூ.4,500 பெற்று வருகின்றனர். அதன் பிறகு, 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அடிப்படை ஊதியம் ரூ.5,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியமாக ரூ.9,300 பெறுகின்றனர். இதனால், மத்திய மாநிலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை ஆய்வு செய்ய தனிநபர் குழுவை தமிழக அரசு நியமனம் செய்தது.
அந்தக் குழு ஆய்வு செய்து கடந்த 2010-ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நமது மாநிலத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கையை மதிப்பிடும் போது, மத்திய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால், ஊதியத்தை உயர்த்தினால் கூடுதலாக ரூ.668 கோடி தமிழக அரசுக்குச் செலவாகும் என அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்தது. எங்களின் கணக்குப்படி தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.310 கோடி மட்டுமே செலவாகும்.
டிப்ளமோ படித்துவிட்டு பல்வேறு துறைகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மத்திய அரசின் ஊதிய விகிதம் வழங்கப்படுகிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்தச் சலுகை வழங்கப்படவில்லை. எனவே, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் தமிழக அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு நடந்தது. அரசு வழக்குரைஞர் ஆஜராகி, மனுதாரர் அளித்த கோரிக்கை மனு மீது மூன்று மாதங்களில் பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


1 comment:
UNITY is Strength
M. GOPAL,Teacher DINDIGUL
9486229370
Post a Comment