Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 15, 2014

    அரசுப் பள்ளிகளின் தரம் உயருமா?

    சென்னையில் சில பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் குழந்தையைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப மனு வாங்குவதற்காக அதிகாலை 3 மணியிலிருந்து பெற்றோர்கள் கியூவில் நிற்கிறார்கள். அடுத்த கல்வியாண்டில் குழந்தையைச் சேப்பதற்கான முயற்சி இந்த நவம்பரிலிருந்தே தொடங்கிவிடுகிறது. சில சமயம் அமைச்சர்கள், பெரிய தொழிலதிபர்கள் வரையிலும் சிபாரிசுப் பட்டியல் நீள்கிறது. ஆனால் இன்றளவிலும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி அளித்துவரும் அரசுப் பள்ளிகளில் சேர எந்த நெருக்கடியும் கிராக்கியும் இல்லை.

    ஏன் இந்த நிலை? அரசுப் பள்ளிகளில் என்ன பிரச்சினை? போதிய இட வசதி, தகுதி பெற்ற ஆசிரியர்கள், அரசின் முழு ஆதரவு ஆகியவை இருந்தும் அரசுப் பள்ளிகளின் மதிப்பு ஏன் கூடவில்லை? இங்கே படிப்பவர்களுக்கு ஏன் கல்லூரிகளிலும் வேலைச் சந்தையிலும் அதிக மதிப்பு இல்லை?
    “அரசுப் பள்ளிகளின் பிரச்சினைகள் ஆழமானவை” என்கிறார் ஊடகவியலாளர் மு. சிவலிங்கம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தத் தன் நண்பர்களின் உதவியுடன் பல்வேறு பணிகளைச் செய்துவரும் இவர் அரசுப் பள்ளிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கிறார்.
    “அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. எனவே மாணவர்களுக்குச் சீரான கல்வியைக் கொடுக்க முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் உள்ள பல ஆசிரியர்கள் படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பெயர்களைப் பதிவுசெய்து, எட்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்துதான் வேலையில் சேர முடிகிறது. இதனால் இவர்கள் தங்களைத் தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப அப்டேட் செய்துகொள்வதில்லை” என்று சொல்லும் சிவலிங்கம், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பல மாணவர்களுக்கு ஆண்டு முழுவதுமே ஆசிரியர்கள் இருப்பதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
    “அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பலர் தினக் கூலி வேலை பார்ப்பவர்கள். அவர்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. இந்தக் குழந்தைகளில் பலர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்கூடம் வருபவர்கள். இதையெல்லாம் புரிந்துகொண்டு அவர்களைக் கையாளக்கூடிய அணுகுமுறை இந்தப் பள்ளிகளில் இல்லை” என்று சொல்லும் சிவலிங்கம், ஆசிரியர், மாணவர் விகிதமும் இந்தப் பள்ளிகளில் சரியாக இல்லை என்கிறார். “ஒரு சில வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டும். ஒரு ஆசிரியை 50, 60 மாணவர்களைச் சமாளிப்பது சாதாரண காரியமல்ல” என்கிறார்.
    பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்னும் அமைப்பின் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளைக் கவனப்படுத்துகிறார்.
    “இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் ஏழு கழிவறைகள்தான் உள்ளன. அவை சரியாகச் சுத்தம் செய்யப்படுவதும் இல்லை. இதையெல்லாம் பார்த்துத்தான் பெற்றோர்கள் பலர் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்” என்கிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதை சகஜமாகப் பார்க்க முடியும் என்று கூறும் இவர், இவர்களைக் கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ பள்ளிகளில் எந்த ஏற்பாடும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். “தனியார் பள்ளி மாணவர்களை இதுபோல பார்க்க முடியாது. காலையில் பள்ளிக்குப் போகும் குழந்தைகள் பள்ளியிலேயே இருக்கும் என்ற நம்பிக்கையும் மாலையில் பத்திரமாக வீடு திரும்பும் என்னும் நிம்மதியும் தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்திருக்கும் பெற்றோர்களுக்கு இருக்கின்றன. அங்கே மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது?” என்று கேட்கிறார்.
    இவ்வளவு குறைகள் இருந்தாலும் அரசுப் பள்ளிகளை மட்டும்தான் பள்ளிக்கூடம் என்று சொல்ல முடியும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. “தனியார் பள்ளிகளை நிறுவனங்கள் என்றுதான் கூற முடியும்” என்கிறார் ஆணித்தரமாக. “பல தனியார் பள்ளிகளில் இரண்டு மதில் சுவர்களுக்கு மத்தியில் கட்டப்பட்ட கட்டிடங்களில் சிறை வைத்திருப்பதுபோல மாணவர்களை வைத்திருக்கிறார்கள். பல பள்ளிகளில் ஓடி விளையாட இட வசதி கிடையாது” என்கிறார் கஜேந்திர பாபு.
    அனைத்து அரசுப் பள்ளிகளும் மோசம் என்று சொல்வதற்கில்லை. கோடம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கத்தில் உள்ள ஆவிச்சி மேல்நிலைப் பள்ளி, சூளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலான சில பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று முதன்மைக் கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
    சென்னையில் இருக்கும் மாநகராட்சிப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், “இங்கே அனைத்து வசதிகளும் இருக்கின்றன: நல்ல ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் மாணவர் சேர்க்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளில் 70 சதவீதத்தைத் தொட்டதே மிகப் பெரிய சாதனையாகக் கருத வேண்டியிருக்கிறது” என்கிறார்.
    “அரசுப் பள்ளிகள் புத்தக அறிவை மட்டுமே வளர்க்கின்றன. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் புத்தகங்களைத் தாண்டிய அறிவு வளர்ச்சியை உறுதி செய்கின்றன. படைப்பாற்றல் வளர்கிறது. ஆங்கிலப் புலமையும் வளர்கிறது. மற்ற திறமைகளை வளர்ப்பதிலும் இப்பள்ளிகள் வெற்றிபெறுகின்றன. ஆனாலும் எனக்கு அரசுப் பள்ளியும் பிடித்திருக்கிறது. நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சிறப்பான பாடத்திட்டம் உள்ளது” என்கிறார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்துவிட்டுத் தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துவரும் மாணவர் ஆதித்யா.
    அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மனித உரிமை ஆர்வலர் கிருஷ்ணவேணி விளக்குகிறார். “தனியார் பள்ளிகள் சிறந்த திறமையாளர்களை உருவாக்கினாலும், சமூகத்தில் பொருளாதார மற்றும் சாதிய வேறுபாடுகளைப் புரிந்துகொண்ட சமூகப் பொறுப்புள்ள திறமையான மனிதர்கள் உருவாக வாய்ப்பளிக்கும் களமாக அரசுப் பள்ளிகளே இருக்கின்றன” என்று அவர் கருதுகிறார்.
    தமிழகத்தில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பிற துறைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக, பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி (14,552.82 கோடி ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிப்பதற்கான ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கம்’ என்னும் திட்டம் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதில் மாநில அரசின் பங்களிப்பு 700 கோடி ரூபாய்.
    கல்விக்கான செலவு அதிகரிக்கப்படுவது நம்பிக்கை தரும் ஒரு விஷயம். இந்தப் பணம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் பலன்கள் அமையும் என்றாலும் பள்ளிக் கல்வி பற்றிய அரசின் அக்கறை கூடியிருப்பதை இந்த நிதி ஒதுக்கீடு உணர்த்துகிறது.
    அரசுப் பள்ளிகளின் தரத்தை எல்லா விதங்களிலும் உயர்த்துவது, தனியார் பள்ளிகளைப் பலரும் அணுகும் அளவில் மாற்றுவது ஆகியவற்றின் மூலம்தான் பள்ளிக் கல்வியில் உள்ள பிரச்சினைகளைப் போக்க முடியும். இரண்டையும் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கல்விக்காகப் பெரும் தொகையை ஒதுக்கியுள்ள தமிழக அரசு அதைச் சிறந்த முறையில் செலவிட்டு அதிகப் பணம் செலவு செய்யாமல் நல்ல கல்வியைப் பெரும்பான்மையான மக்களுக்கு வழங்குமா?

    No comments: