ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பதில் மாணவர், பெற்றோர் ஆகிய இருவருக்குமே முக்கிய பங்கு உண்டு. பெற்றோர்களின் கருத்துக்களுக்கு மாணவர்கள் மதிப்பளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்களது விருப்பத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
சிலர் இதைப் படி, அதைப் படி என குழப்பவும் அதிக வாய்ப்புண்டு. எனவே, பாடப்பிரிவுகளை நன்கு ஆராய்ந்து அறிய சில காலம் ஒதுக்கவேண்டும்; அதில் தங்களுக்கான சிறந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
தனிப்பட்டவர்களின் திறமையைப் பொருத்தே வேலை வாய்ப்புகள் அமைகின்றன. ஏராளமான மாணவர்கள் இன்று கல்வி கற்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவருமே வெற்றியாளர்களாக வருவதில்லை. ‘ஏதோ நானும் படிக்கிறேன்’ என்ற எண்ணத்தில் இல்லாமல் ஆர்வத்துடன், உண்மையாக படிப்பவர்கள் எப்போதுமே சிறந்த இடத்தை பிடிப்பர்.
வளர்ச்சியின் அறிகுறி
இன்றைய காலகட்டத்தில் பல புதிய புதிய படிப்புகள் அறிமுகப் படுத்தப்படுகின்றன. இவை நமது நாட்டின் வளர்ச்சியை காட்டுவதாக உள்ளது. பொது மருத்துவப் படிப்பையும் கடந்து, பிசியோதெரபி, நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற படிப்புகளின் முக்கியவத்துவம் குறித்து பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வு பெற வேண்டும். காலப்போக்கில் இதில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்.
இந்தியாவில் தொழில் கல்வி, மருத்துவக் கல்வி என ஒவ்வொரு துறைகளிலும் கல்வித் தரத்தை மேம்படுத்த, கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்க, அவற்றை கண்காணிக்க என ஏ.ஐ.சி.டி.இ., எம்.சி.ஐ., போன்ற பிரத்யேக அமைப்புகள் செயல்படுவது வரவேற்கத்தக்கது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பிரத்யேக அமைப்பு இருப்பதால் குழப்பமின்றி தங்களுக்கான பணிகளை சிறப்பாக செய்ய முடிகிறது. இதில் துறை சார்ந்த வல்லுனர்கள் அதிகளவில் ஈடுபட்டால் மேலும் சிறப்பானதாக அமையும்.
வளர்ந்த நாடு
கல்வித் துறையை பொறுத்தவரை, இந்தியா வளரும் நாடு இல்லை. ஒரு வளர்ந்த நாடுதான். இந்திய கல்வியின் மதிப்பை பற்றி இன்னும் உலக நாடுகள் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் அதிக ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் அவசியானவை. இந்தியாவும் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான சுதந்திரமும், வாய்ப்புகளும் இங்கு அதிகமாக உள்ளன.
இந்திய அரசும் கல்வித்துறையை ஒரு தொழில் துறையாக கருதாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டும், கல்வி நிறுவனங்களுக்கு உதவியும், கல்வித்துறை மென்மேலும் சிறப்படைய போதிய திட்டங்களை வகுத்தும், இன்னும் பல மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.
பல்கலையின் முயற்சி
மாணவர்கள் தங்களின் மேற்படிப்புகளுக்காக, ‘ஜிமேட்’ உட்பட பல்வேறு தேர்வுகள் எழுத பிரத்யேகமாக பயிற்சி பெறுகின்றனர். தங்களது இளநிலைப் படிப்பிலேயே அந்த தேர்வுகளுக்காக தயார்படுத்தும் வகையில், எங்களது பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்துள்ளோம். இதனால், மாணவர்கள் தங்களது நேரத்தையும், பணத்தையும் சேமிக்க முடியும். அதேசமயம், தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.
- ஏ.சி.எஸ். அருண்குமார், தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment