தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் ஊதிய விகிதம் குறித்த குறைகள் களையப்படவில்லை.
மத்திய அரசு பணியாளர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்த மத்திய அரசு, ஊதிய உயர்வில் எந்த பிரிவினருக்கும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஊதியக் காரணி என்ற புதிய முறையை பயன்படுத்தியது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் 01.01.2016 அன்று வாங்கிய அடிப்படை ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதனால் ஊதிய உயர்வில் பாகுபாடு காட்டப்படவில்லை. அதேபோன்ற அணுகுமுறையையே தமிழக அரசும் இப்போது பின்பற்றி புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயித்துள்ளது.
இதனால் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. ஆனால், இதற்கு முன்பிருந்த ஊதிய விகிதங்களில் உள்ள குறைபாடுகள் இன்னும் களையப்படாமல் அப்படியே நீடிக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பல்வேறு பிரிவினரின் ஊதிய விகிதங்கள் தாறுமாறாக மாற்றப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களில் உள்ள குளறுபடிகள் களையப்பட வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகவே அவர்கள் போராடி வந்தனர். ஆனால், அந்தக் குளறுபடிகள் தீர்க்கப்படாத நிலையில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது அவை சரி செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்காமல் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தியிருக்கிறது. இதனால் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது. உடனடியாக ஒரு நபர் குழு அமைத்து, அடுத்த 3 மாதங்களில் அதன் அறிக்கையைப் பெற்று ஊதிய விகிதங்களில் நீடிக்கும் முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களின்படி தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்ச ஊதியத்தில் வெறும் 7% மட்டுமே குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் குறைந்தபட்ச ஊதியம் என்பது அதிகபட்ச ஊதியத்தில் 8% ஆக இருந்தது. புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படும் போது குறைந்தபட்ச ஊதியத்திற்கும், அதிகபட்ச ஊதியத்திற்கும் வேறுபாடு குறைய வேண்டுமே தவிர அதிகரிக்கக்கூடாது. ஆனால், இப்போது இடைவெளி அதிகரித்திருப்பதால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும்.
அதேபோல், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சத்துக்கு இடையிலான வித்தியாசமும் அதிகரித்திருக்கிறது. பொதுவாக அதிகபட்ச ஊதியத்தில் 20 விழுக்காடாவது குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட்டால் தான் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஓரளவாவது மட்டுப்படுத்த முடியும். தமிழக அரசின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தப்பட்ச ஊதியத்தை, அதிகபட்ச ஊதியத்தில் 10 விழுக்காடாக, அதாவது ரூ.22,500 ஆக நிர்ணயிக்க வேண்டும். அதேபோல், குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.12,000 ஆக அரசு உயர்த்த வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக புதிய ஊதிய விகிதங்கள் 01.01.2016 முதல் கருத்தியல் அடிப்படையிலும், 01.10.2017 முதல் பணப்பயன் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது 01.01.2016 முதல் இப்போது வரையிலான 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும். இதற்கு முந்தைய 6 ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போதும் ஊதிய உயர்வு நிலுவை ஒரு தவணையிலோ, பல தவணையிலோ வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது கூட நிலுவைத்தொகை ஒரே தவணையில் வழங்கப்பட்டது. அவ்வாறு இருக்க தமிழக அரசு ஊழியர்களுக்கு மட்டும் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க இயலாது என்று அரசு கூறுவது எந்த வகையில் நியாயம்?
இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் 01.01.2016 முதல் 20% இடைக்கால நிவாரணம் வழங்கும்படி தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது.
ஆனால், 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய ரூ.26,000 கோடியை ஏமாற்றத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். இது சிறிதும் நியாயமற்றது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை தவணை முறையிலாவது வழங்க தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment