அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 12 லட்சம்
மாணவ, மாணவிகளுக்கு, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்கப்படும் என
தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம்
முழுவதும் உள்ள பள்ளிகளில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு
அந்தந்த பள்ளிகளிலேயே ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்
சான்றிதழ் வழங்கப்படும் என சட்டசபையில் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன் அடிப்படையில், இந்த சான்றிதழ்கள்
வழங்குவது தொடர்பான கருத்துருவை, வருவாய்த்துறை முதன்மை செயலர், அரசுக்கு
அனுப்பினார். இதை தொடர்ந்து, சான்றிதழ் வழங்குவது குறித்த, அரசாணை
வெளியிடப் பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும்,
அரசு அங்கீகாரம் பெற்ற மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் படிக்கும், 12
லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
அரசாணையின்படி, சான்றிதழ் வழங்கும் பணிக்கான
காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் ஆறாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கான, ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்களை
வழங்குவதற்கான விண்ணப்பங்கள், உரிய ஆவணங்கள் அனைத்தையும், ஜூன், ஜூலை,
ஆகஸ்ட் மாதத்திற்குள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், சம்பந்தப்பட்ட
தாசில்தாருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர்
மாதங்களில், சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் வந்திருக்கும்
விண்ணப்பங்களை பரிசீலித்து, விசாரணை மேற்கொண்டு, நிரந்தரச் சான்றுகளை
தயாரிக்க வேண்டும்.
அடுத்ததாக, டிசம்பரில் அந்தந்த பகுதி
தாசில்தார்கள், தயாரிக்கப்பட்ட ஜாதி, இருப்பிட, வருமானச் சான்றிதழ்களை,
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஜனவரிக்குள்
தன்னிடம் வந்துள்ள சான்றிதழ்களை, உரிய மாணவர்களுக்கு பள்ளி
தலைமையாசிரியர்கள் வழங்கி விட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment