Pages

Tuesday, May 19, 2015

கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்

கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உண்ணாவிரதம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற இயக்கம் சார்பில் நீதிமன்ற உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் பலகோடி ரூபாய் கையாடல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

வீரப்பன் மனைவி

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற இயக்கத்தின் மாநில தலைவர் முனுசாமி வரவேற்றார். இதில் மலைவாழ் மக்கள் உரிமை இயக்கத்தின் மாநில தலைவி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 


இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவின்படி 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்காமல் வேறு எந்தஒரு காலிப்பணியிடங்களுக்கான அரசு தேர்வும் தமிழகத்தில் நடைபெற கூடாது. குறிப்பாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள பள்ளி ஆய்வாளர், நீதித்துறை பணியிடம் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையிடம் மாற்றுத்திறனாளிகள் எந்த ஒரு மனு கொடுத்தாலும் அதன் மீது உடனடியாக காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கைகளை குறித்து மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.