முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 22ம் தேதி காலை முடிந்ததும், பிற்பகல் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 11ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் விடுதலை ஆனார்கள். பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பிற்கு பிறகு தமிழக முதல்வராக ஜெயலலிதா உடனடியாக பதவி ஏற்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஜெயலலிதா உடனடியாக பதவி ஏற்கவில்லை. இந்நிலையில், வரும் 22ம் தேதி (நாளை மறுதினம்) காலை 7 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாளை மறுதினம் காலை 7 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 155 அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் முறைப்படி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதம் ஜெயலலிதாவிடம் அளிக்கப்படும். அந்த கடிதத்தை சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ரோசய்யாவிடம் அளித்து, ஜெயலலிதாவின் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க அழைக்கும்படி உரிமை கோரப்படும். முன்னதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிப்பார்.
இந்நிலையில், 22ம் தேதி பிற்பகல் ஜெயலலிதா பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு நேரில் சென்று மாலை அணிவிக்கிறார் என்று அதிமுக கட்சி தலைமை கழகம் சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருகிற 22ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும், அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கும், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதிக்கு பிறகு ஜெயலலிதா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும், 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களை இந்த நிகழ்ச்சி மூலம் சந்திக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும், ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். 22 நாட்கள் சிறை வாசகத்துக்கு பிறகு கடந்த அக்டோபர் 17ம் தேதி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அக்டோபர் 18ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்து, தனி விமானம் மூலம் அன்றைய தினம் மாலை 5.10 மணிக்கு சென்னை வந்து இறங்கினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை சுமார் 16 கி.மீ. தூரம் வழிநெடுக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கூடி நின்று ஜெயலலிதாவை வரவேற்றனர்.
அக்டோபர் 18ம் தேதி இரவு போயஸ் கார்டன் சென்ற பிறகு தற்போது வரை, அதாவது சுமார் 7 மாதம் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் கூட பிரசாரம் செய்யாமல், அறிக்கை மட்டுமே வெளியிட்டார். ஒரே ஒருமுறை மட்டும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியது போன்ற புகைப்படம், அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதுதவிர எந்த சந்தர்ப்பத்திலும் ஜெயலலிதா தொண்டர்களை சந்திக்கவில்லை. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட ஒருசில முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அவ்வப்போது போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து வந்ததாக கூறப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்தித்த புகைப்படம் கூட கடந்த 7 மாதத்தில் ஒருமுறை கூட வெளியிடப்படவில்லை.
சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் அறிவித்ததும், ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் போயஸ் கார்டன் முன் திரண்டனர். அப்போதும் ஜெயலலிதா வெளியே வந்து அதிமுக தொண்டர்களிடம் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. தீர்ப்பு வந்து 10 நாட்கள் ஆகியும் ஜெயலலிதா பொதுமக்கள் யாரையும் சந்திக்கவில்லை. இதனால் தொண்டர்கள் சோர்வடைந்தனர்.
இந்தநிலையில்தான், ஜெயலலிதா நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிக்கு அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார். 7 மாதத்திற்கு பிறகு அதிமுக தொண்டர்களை ஜெயலலிதா பார்க்க இருப்பது, அவர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவை நேரில் பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 23ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா பதவியேற்பு விழா, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறைச் செயலாளர் ஜித்தேந்திரநாத் ஸ்வேன், டிஜிபி அசோக்குமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பதவி ஏற்பு விழாவை சிறப்பாக நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.