Pages

Friday, February 27, 2015

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடியுங்கள்: அமைச்சர் வேண்டுகோள்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படிஅதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்வி அதிகாரிகள் கூட்டம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 236 பள்ளிகளைச்சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 43 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வு செம்மையாக நடத்துவதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் கே.சி.வீரமணி
கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா முன்னிலை வகித்தார். அனைவருக்கும் கல்வி திட்டமாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளர் அழகேசன், துணை செயலாளர் சுரேஷ் குமார், அரசுதேர்வு இயக்குனர் கு.தேவராஜன், இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் பிச்சை மற்றும் இணை இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-
தேர்வு எழுத கட்டமைப்பு வசதிகள்
அரசு பொதுத்தேர்வுகள் நடைபெறப்போவதை முன்னிட்டு முன்கூட்டியே அனைத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களும், இணை இயக்குனர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு மையம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக உரிய கட்டமைப்பு வசதியுடன் உள்ளதா? குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவசதிகள் இருக்கிறதா என்றுநேரில் பார்வையிட்டுவந்தனர். பெரும்பாலான மையங்கள் தயார் நிலையில் இருந்தன. சில மையங்களில் சற்று வசதிகள் குறைவாக இருந்தன. அந்த மையங்களும் இப்போது சரி படுத்தப்பட்டு தயாராக உள்ளன. பள்ளிக்கல்வித்துறைதான் பெரிய துறையாகும். இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள்.
சலசலப்புக்கும் வழி இன்றி தேர்வை நடத்துங்கள்
தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து தற்போது கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையைச்சேர்ந்த அதிகாரிகள் எந்த வித சலசலப்புக்கும் வழி ஏற்படுத்தாமல் தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கவேண்டும்.அரசு பள்ளிகளில் இருந்து கடந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தனர். அதுபோல இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மட்டுமல்லபிளஸ்-2 தேர்விலும் எடுக்கவேண்டும். அரசுக்கு நல்ல பெயர் எடுத்துக்கொடுக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.