Pages

Tuesday, January 13, 2015

ஆசிரியர்களின் ஈகோ -வால் பாதிக்கப்படும் மாணவர்கள்

விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள ஈகோ -வால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 340 மாணவர்கள் படிக்கின்றனர். 11 ஆசிரியர்கள் உள்ளனர். 1 முதல் 3ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி செயல்படுகிறது. ஆசிரியை காஞ்சனா, ஆங்கிலவழி 2ம் வகுப்பு ஆசிரியர். இவர் செயல்வழி கற்றல் பாடத் திட்டத்தின் படி முதல் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களை இணைத்து பாடம் நடத்த வேண்டும் என்பது உத்தரவு.

இரு வகுப்பு மாணவர்கள் 35 பேருக்கு ஆசிரியை பாடம் நடத்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல் கலெக்டர் அலுவலகம் சென்றதால், மூத்த ஆசிரியை பராசக்தி தலைமை ஆசிரியராக பணியாற்றினர். ஆசிரியை காஞ்சனா பள்ளிக்கு தாமதமாக வந்தார். வருகை பதிவேட்டில் சிறு விடுப்பு என தலைமை ஆசிரியர் பதிவு செய்தார். ஆசிரியைகளிடையே ஈகோ உருவானது. ஆத்திரமடைந்த ஆசிரியை காஞ்சனா, முதல் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க இயலாது என கூறி வரண்டாவில் உட்கார வைத்தார்.

தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து, "பாடம் நடத்தாத பள்ளிக்கு ஏன் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்" என கூறினர். ஆசிரியை பெற்றோர்களை சமாதானம் செய்து அனுப்பினார். பெற்றோரின் புகாரை தொடர்ந்து பள்ளி கல்வி வளர்ச்சி குழு தலைவர் கந்தசாமி பள்ளிக்கு வந்து விசாரித்தார்.

பெற்றோர் தரப்பில் தர்மலட்சுமி, கூறுகையில், "இங்கிலீஸ் மீடியம் என்பதால் எனது மகனை இங்கு சேர்த்தேன். உருப்படியாக எதையும் ஆசிரியர்கள் கற்று தரவில்லை. ஒரு வருடமாக நோட்டில் 10 தாள்கள் மட்டுமே எழுதியுள்ளார். தனியார் பள்ளியில் சேர்க்க வசதி இல்லாததால் அரசு பள்ளி சேர்த்தேன்.

இங்கே பிள்ளைகளை பாடம் நடத்தாமல் 2 நாளாக வரண்டாவில் உட்கார வைத்துள்ளனர்" என்றார். கல்வி துறை அலுவலர்கள் கவனம் செலுத்தி பள்ளி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது பராபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.