நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும், சிங்காநல்லுார் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதுடன், பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிங்காநல்லுார் ஆணையங்காடு ரோட்டில் அமைந்துள்ளது அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. கடந்த, 1967ம் ஆண்டு இப்பள்ளி துவங்கப்பட்டு, 1974ல் அரசு பள்ளியாக, 1.5 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது, 110 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
ஒரு தலைமையாசிரியர் அறை, ஏழு வகுப்பறைகள் உள்ள இப்பள்ளியில், ஐந்து வகுப்பறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அறிவியல் ஆய்வகம், நுாலகம், சுத்தமான கழிவறை போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் தரம் உயர்த்த, அரசால் பிற துறைகளில் இல்லாத அளவுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது.
நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும், இப்பள்ளி வெறும் ஓட்டு பள்ளிகூடமாக வைத்திருப்பது ஏன் என்பது புரியவில்லை. மேலும், உறுதியற்ற சத்துணவு அறை, விளையாட்டு மைதானத்தை ஒட்டி வலது புறம் ரயில்வே கேட், இடதுபுறம் ஆழ்கிணறு, உடைந்து கிடக்கும் கேட், என பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எட்டு ஆசிரியைகள், இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இப்பள்ளியில், ஆண், பெண் இருபாலரும் ஒரே கழிப்பறையை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.
பள்ளியிலிருந்து, ஒத்தையடி பாதையில் சில நிமிடம் நடந்து சென்றால், மட்டுமே பள்ளி மைதானத்தை சென்றடைய முடியும். போகும் வழியில் புதர் சூழ்ந்துள்ளதால், பாம்பு, பூச்சிகள் கடிக்கும் அபாயம் உள்ளது. இதனால், இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்திருக்கும் பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர். நலத்திட்ட பொருட்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, பள்ளி வசதிகளையும், பாதுகாப்பையும் மேம்படுத்த ஒதுக்கும்பட்சத்தில், அரசு பள்ளிகள், முன்மாதிரியாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.