Pages

Monday, November 24, 2014

அனைத்துப் பள்ளிகளிலும் யோகாவை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு திட்டம்


அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது: யோகா கலையை கற்பதன் மூலம் இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் நல்ல பண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.


இதற்காக, அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் யோகாவை ஒரு பாடமாக சேர்க்கும்படி, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு, சாதகமான பதில் கிடைத்தால், வரும் ஜூன் மாதத்திற்குள், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடியும், இந்த திட்டத்துக்கு சம்மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்படும். நம்முடைய பாரம்பரிய கலைகளையும், மருத்துவ முறைகளையும் மறந்து விட்டோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் நம்முடைய கலைகளையும், மருத்துவ முறைகளையும் பின்பற்றி, வளர்ச்சி அடைந்து விட்டன. அடுத்தகட்டமாக, அனைத்து கிராமங்களிலும் ஆயுர்வேத மையங்களையும் துவக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச யோகா தினம்

* சமீபத்தில், ஐ.நா., பொதுச் சபையில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

* மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அனைத்து பள்ளிகளிலும் யோகாவை ஒரு பாடமாக சேர்த்து, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

* மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக சேர்க்க, சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.

* இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது யோகா குறித்த தகவல் வெளியாகியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.