Pages

Monday, November 24, 2014

தமிழ் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமைக்கான மனு: தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றம்


மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே கட் - ஆப் மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க கோரி தாக்கலான மனுவை, தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.


பழநியைச் சேர்ந்த டாக்டர் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இரு மாணவர்கள், ஒரே கட் - ஆப் மதிப்பெண் பெற்றால், யாருக்கு முன்னுரிமை வழங்குவது என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில், பிளஸ் 2 உயிரியல் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்குதல்; இரண்டாவதாக வேதியியல் மற்றும் விருப்பப் பாடங்களில் பெற்ற மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

முதல் நிபந்தனை ஏற்புடையதே. ரேண்டம் எண், பிறந்த தேதி என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. இது ஏற்புடையதல்ல. ரேண்டம், பிறந்த தேதிக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்குப் பதிலாக, பிளஸ் 2 தமிழ் பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதை, 2015 - 16ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கையில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலருக்கு மனு அனுப்பி உள்ளேன். இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க, அரசு தரப்பிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார்.

இம்மனு, நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி கொண்ட, பெஞ்ச் முன் நேற்று, விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், வெங்கடேஷ் ஆஜரானார். நீதிபதிகள், "இதை பொதுநல வழக்காக ஏற்க முடியாது. எனவே, இம்மனு, தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது" என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.