Pages

Wednesday, October 22, 2014

உண்மைத் தன்மை சான்றிதழ் தபாலில் அனுப்ப தடை : தேர்வுத்துறை அறிவிப்பு

'ஆசிரியர், பணியாளர்களின், உண்மை தன்மை அறிதல் கோருதல் சார்பான கடிதங்களை அஞ்சல் வழி அனுப்பக்கூடாது' என தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களிடமிருந்து, மேல்நிலை, இடைநிலை தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோருதல், மதிப்பெண் சான்றிதழ்களை தொலைத்து
விட்டு 'டூப்ளிகேட்' சான்றிதழ் கேட்கும் விண்ணப்பங்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிதல், ஆகிய அனைத்தையும், ஒருங்கிணைத்து நிலுவை விபரங்களை பெறும் வகையில், மண்டல துணை இயக்குனர்கள், ஒவ்வொரு மாதமும், இரண்டாம் வெள்ளிக்கிழமை தங்களது மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் நேர் முக உதவியாளர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களுடன் கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்பிட வேண்டும்.
கூட்டம் நடத்தும் ஓரிரு நாட்களுக்கு முன்பு, மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோருதல், 'டூப்ளிகேட்' மதிப்பெண் சான்றிதழ் கோருதல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிதல் போன்ற விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களின் நேர்முக உதவி அலுவலர்கள், தேர்வு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ் உண்மை தன்மை கோரி பெறப்படும் விண்ணப்பங்களை, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களும் தொகுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவி அலுவலரிடம் வழங்க வேண்டும்.
இனி வருங்காலங்களில், எக்காரணத்தை கொண்டும் உண்மை தன்மை அறிதல் சார்ந்த கடிதங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்களோ, உதவி தொடக்க கல்வி அலுவலர்களோ, மாவட்ட கல்வி அலுவலர்களோ, அஞ்சல் வழியே அனுப்புதல் கூடாது. அவ்வாறு அஞ்சல் வழியாக பெறப்படும் கடிதங்கள் நிராகரிக்கப்படும். பழைய முறையிலேயே நேரில் சமர்ப்பிக்க வேண்டும், என்றார். உண்மை தன்மைக்கு சான்றிதழ்களை அனுப்பிய ஆசிரியர்கள் பல மாதங்களாக, சான்றிதழ் திரும்ப கிடைக்காமல் இன்றளவும் உள்ளனர். இதனால், அவர்கள் தகுதிகாண் பருவம் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.