Pages

Thursday, September 25, 2014

அனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம்

’வரலாறு, புவியியல் பாடங்களை, பள்ளிக் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வகுப்பறையிலும், சுவர் வரைபடங்கள் (வால் மேப்) கட்டாயம் தொங்கவிடப்பட வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


பள்ளிப் பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை, சமூக அறிவியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேல்நிலை கல்வியிலும், பிளஸ் -1, பிளஸ்- 2 வகுப்பில், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு. இதில், மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், அரசியல், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து, எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்.

அதுமட்டுமல்லாமல், வரைபடங்கள் தொடர்பான வினாக்களும், தேர்வில் கேட்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரைபடம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, நூறு மதிப்பெண்கள் எடுக்க முடியும். தேர்வுக்கு மட்டுமின்றி, பொது அறிவை வளர்ப்பதிலும், வரைபடங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதற்காக, ’இந்தியா’, ’தமிழ்நாடு’, ’மாவட்டம்’ என, மூன்று வகையான வரைபடங்கள், வகுப்பறை சுவர்களில் தொங்கவிட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், “பள்ளி வகுப்பறைகளில், தேர்வு நாட்களை தவிர, எல்லா நாட்களிலும், புவியியல் சுவர் வரைப்படங்கள், கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ள, சிறு குழுக்களாக பிரித்து, வாரந்தோறும் போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது, வரைபட நிகழ்வுகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.