Pages

Thursday, September 25, 2014

ஆசிரியர்களுக்கான இடமாற்றல் கொள்கைக்கு இறுதி வடிவம்

ஆசிரியர்களுக்கான இடமாற்றல் கொள்கைக்கு, இறுதி வடிவம் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும், 710 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 251 ஆரம்பப் பள்ளிகள், 52 நடுநிலை, 73 உயர்நிலை, 56 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட, 433 அரசு பள்ளிகளும் அடங்கும்.


அரசின் பள்ளிகளில், 6000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என, 20க்கும் மேற்பட்ட பிரிவு ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.ஆசிரியர் பணியிடங்களை, அரசு தொடர்ச்சியாக நிரப்பி வந்தபோதும், ஆசிரியர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக, கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதற்கு, ஆசிரியர்கள் பலர் விரும்புவதில்லை. நகரப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வீட்டு வாடகைப்படி வழங்கப்படுகிறது. கிராமப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வீட்டு வாடகைப்படி கிடையாது.

வீட்டு வாடகைப்படி கிடைக்காதது, போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மனதில் கொண்டு, சிபாரிசு அடிப்படையில் ஆசிரியர்கள் பலர், நகரத்தில் அமைந்துள்ள பள்ளிகளிலேயே, பல்லாண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். கிராமங்களுக்கு இடமாற்றல் செய்தால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் சிபாரிசுடன், டெபுடேஷன், சர்வீஸ் பிளேஸ்மெண்ட், அலுவலக பணி என, மீண்டும் நகரத்துக்கே திரும்பி விடுகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆசிரியர்களுக்கான இடமாற்றல் கொள்கையை உருவாக்க அரசு முடிவு செய்தது. இந்த பணிகள் நிறைவடைந்து, கொள்கைக்கு இறுதிவடிவம் தரப்பட்டுள்ளது. இதற்கான முறைப்படியான உத்தரவு, விரைவில் வெளியாக உள்ளது.இதன்படி, நகர், புறநகர், கிராமம், மிக உள்ளடங்கிய கிராமம் என, நான்கு பிரிவாக, புதுச்சேரி பிரிக்கப்படும். புதிதாக பணி நியமனம் செய்யப்படுபவர்கள், மிக உள்ளடங்கிய கிராமத்தில் பணியமர்த்தப்படுவர்கள். அங்கு பணியை முடித்த பின், கிராமம், புறநகர், நகர் என படிப்படியாக, நகரத்து பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, நகரப்பகுதியில் தொடர்ந்து பணியாற்றுபவர்களும், மிக உள்ளடங்கிய கிராமப் பகுதிக்கு சென்று, படிப்படியாக திரும்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், ஆசிரியர்களுக்கான இடமாற்றல் கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.