Pages

Thursday, September 25, 2014

‘மங்கள்யான்’ செயற்கைக்கோள்: இந்திய விஞ்ஞானிகளின் மாபெரும் சாதனை

’மங்கள்யான்’ செயற்கைக்கோள் திட்டமிட்டபடி, அதன் சுற்றுவட்ட பாதையில் நுழைந்து விட்டது. இது, இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்த மாபெரும் வரலாற்று சாதனை. இந்த பயணத்தை, இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வெற்றிகரமாக, 14 விஞ்ஞானிகள் கொண்ட முக்கிய குழுவுடன், குறிப்பிட்ட காலத்திட்டப்படி வெற்றியாக்கியது பாராட்டத்தக்கது. இந்த ஆய்வில் துறைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி எஸ்.கே.சிவகுமார் கூறுகையில், ’ஆரம்பம் முதல் எவ்வித குளறுபடியும் இன்றி கட்டளைப்படி செயல்பட்ட விதம் பெருமை தருகிறது. நம் குழந்தை வெற்றியுடன் விண்ணில் பயணிக்கிறது’ என்றிருக்கிறார்.


மங்கள்யான் பயணப் பாதையை நிர்ணயம் செய்யும் நிகழ்ச்சி முற்றிலும் சிக்கல் நிறைந்தது. இதன் வெற்றி தான், மங்கள்யான் திட்டத்தை மதிப்பீடு செய்வதாக கருதப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுடன், பிரதமர் மோடி பங்கேற்று, அந்த பதற்றமான நிமிடங்களை கழித்ததும், அவர் விஞ்ஞானிகளின் சாதனைகளை பாராட்டிய விதமும் மிகவும் சிறப்பானது.

’ஹாலிவுட்’ படம் எடுக்கும் செலவை விட பன் மடங்கு குறைவாக, 6.5 கோடி கி.மீ., தொலைவில் உள்ள, ’சிவப்பு கிரகமான’ செவ்வாய்க்கு மேற்கொண்ட முதல் பயண முயற்சி வெற்றி அடைய, விஞ்ஞானிகளின் அயராத உழைப்பு முக்கிய காரணம் என்று, அவர் பாராட்டியது சிறப்பானது.

முன், வாஜ்பாய் காலத்தில் துவங்கிய, ’சந்திரயான் வெற்றி’ இன்று இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததாக தெரிவித்த மோடி, இந்திய பாரம்பரியத்தின் பெருமைகளை வளர்க்க, இளம் விஞ்ஞானிகளுடன் இணைந்து, ’குரு - சிஷ்ய’ பாரம்பரியத்தில் மேலும் சாதனைகள் படைக்க அவர்களைக் கேட்டுக் கொண்டது முற்றிலும் வித்தியாசமானது. இம்மாதிரி ஆக்கப்பூர்வ அரும் சாதனைகளால், இந்தியா, இனி விவேகானந்தர் வார்த்தைகளில், ’ஜகத்குரு பாரத்’ ஆக மாறும் என்று கூறிய கருத்தும், உலக அரங்கில் உற்று நோக்கப்படும். ’தலைசிறந்த, எளிதில் முடியாதது என்று கருதப்படும் விஞ்ஞான ஆய்வுகளில் கிடைக்கும் வெற்றி, நம் நாட்டின் வளத்தை வளர்க்க உதவுவதுடன், உலக அரங்கில் கவுரவம் கிடைக்கும்’ என, மோடி குறிப்பிட்டது நம்பிக்கை தரும் வார்த்தைகள்.

செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்க விண்வெளிமையமான, ’நாசா’வில் இருந்து அனுப்பட்ட, ’மேவன்’செயற்கைக்கோள், செவ்வாய் சுற்றுவட்ட பாதை யில் ஏற்கனவே பயணிக்க துவங்கி விட்டது. அதன் பணிகள் முற்றிலும் வித்தியாசமானவை. செவ்வாயின் புறப்பரப்பில் உள்ள லேசான அடுக்கு, அதன் தன்மைகள் உட்பட, பல அம்சங்களை அது ஆய்வு செய்யும்.அது பயணிக்கும் காலத்தில், நம் மங்கள்யான் பயணிக்கிறது. அமெரிக்க, ’நாசா’ அமைப்பும் நம் வெற்றியை பாராட்டியிருக்கிறது.

உலக அரங்கில் செவ்வாய் பயணத்தை மேற்கொண்ட நாடுகளில், நான்காவது நாடாக இடம்பெற்றுள்ளது இந்தியா. இனி, அமெரிக்கா உட்பட இத்தொழிலில் வளர்ந்த நாடுகள், நவீன தொழில்நுட்பங்களை நம்முடன் தயங்காமல் பகிர்ந்து கொள்ள முன்வரும்.இந்த அபார வெற்றியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலரும் பாராட்டி உள்ளனர்.’இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர், 84, இந்த வெற்றியை, ’ஜெய் பாரத்’ என்று வர்ணித்துள்ளார்.

தற்போது, செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வலம் வரும், ’440 நியூட்டன் இன்ஜின்’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோள் தரப்போகும் படங்கள், சில தகவல்கள், நம் ஆய்வின் பரிமாணத்தை மேலும் சிறப்பாக்கும்.விண்வெளித் துறையில் வெற்றிகள், அரிய கண்டுபிடிப்புகள் ஆகியவை நாட்டை வளமாக்குவதுடன், மற்ற நாடுகளின் நடுவே தனி அந்தஸ்தை தரும். அதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது அயராத உழைப்பால் உதவியுள்ளனர்.

குறிப்பாக, அறிவியல் பயிலும் முதுகலை மாணவ, மாணவியர் இனி இப்பயணத்தின் நுணுக்கங்களை ஆர்வமாக ஆராய முற்படும்போது, அதில் பலர் விஞ்ஞானிகளாக வருவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.