Pages

Saturday, March 29, 2014

பெண் தேர்தல் அலுவலர்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப போக்குவரத்து வசதி வேண்டும்

பெண் தேர்தல் அலுவலர்கள் தக்க பாதுகாப்புடன் வீடு திரும்ப தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராஜேஷிடம் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சரவணன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் நாடாளுமன்ற தேர்தல் 2014ல் தேர்தல் அலுவலர்களாகவும், வாக்குச் சாவடி அலுவலர்களாகவும் பணியாற்ற உள்ளனர். அவர்கள் பணிபுரியும் தொகுதிகளை விட்டு, வேறு தொகுதிகளிலும், வேறு மாவட்டங்களிலும் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 
அவர்களுக்கு தேர்தல் வகுப்புகளிலேயே அஞ்சல் வாக்கு அளிக்க தேவையான உரிய படிவங்களை, உரிய கால அவகாசத்தில் போதுமான அளவு வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல்கள் தொகுதி வாரியாக தேர்தல் வகுப்பு நடைபெறும் இடங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 
தேர்தல் பயிற்சிகளில், வகுப்பு எடுக்கவுள்ள தேர்தல் அலுவலர்கள், வகுப்புகளில் கலந்து கொண்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் அஞ்சல் வாக்கு அளிக்க தக்க அறிவுரை வழங்க வேண்டும். அஞ்சல் வாக்கு படிவங்களில் சான்றொப்பம் பெற வேண்டிய படிவங்களில், தேர்தல் பணியில் உள்ள சான்றொப்பமிட தகுதியுள்ள அலுவலர்கள் தேர்தல் வகுப்பிலேயே சான்றொப்பமிட தக்க அனுமதியும், அறிவுரையும் வழங்க வேண்டும். 
தேர்தல் வகுப்பிலேயே இறுதி வகுப்பு நாளன்று, அஞ்சல் வாக்கு செலுத்த ஏதுவாக வாக்கு பெட்டி வைத்திருந்து, அதை தக்க பாதுகாப்புடன் எடுத்துச்செல்ல வேண்டும். மேலும், தேர்தல் முடிந்த பின்னர் பெண் தேர்தல் அலுவலர்கள் தக்க பாதுகாப்புடன் வீடு திரும்ப தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தர வேண்டும். தேர்தல் கூடுதலாக 2 மணி நேரம் நடத்தப்படுவதால் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.
தேர்தல் வாக்கு சாவடிகளில் போதுமான தளவாட பொருட்களும், கதவு, ஜன்னல்கள் உள் தாழ்ப்பாள் வசதிகளுடன் நல்ல நிலையில் உள்ளவாறு பாதுகாப்பு செய்து தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.